Home /News /tamil-nadu /

கொரோனாவிலிருந்து மீண்ட ஐந்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் - மருத்துவமனை ஆய்வில் தகவல்

கொரோனாவிலிருந்து மீண்ட ஐந்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் - மருத்துவமனை ஆய்வில் தகவல்

சர்க்கரை நோயாளிகள்

சர்க்கரை நோயாளிகள்

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்ட 198 பெண்கள் உட்பட 500 நோயாளிகளிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

  • News18
  • Last Updated :
கொரோனாவிலிருந்து மீண்ட ஐந்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் உள்ளதாக மருத்துவமனை ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு என பிரத்யேக கிளினிக் ஓமந்தூரார் மருத்துவமனையில் இயங்கி வருகிறது. இதில் 3500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.

இதில் முதல் கட்டமாக 500 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 500 பேரில் 92 பேருக்கு அதாவது 18.4% பேருக்கு கொரோனாவுக்கு பிறகு சர்க்கரை நோய் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சராசரியாக சர்க்கரை அளவு 239mg/dL ஆக இருந்தது. சர்க்கரை நோயாளிகள் அல்லாதவர்களில் இந்த அளவு 114mg/DL என்றிருந்தது.

கொரோனாவிலிருந்து மீண்டு மூன்று மாதங்கள் முதல் ஒன்றரை ஆண்டுகள் வரை ஆனவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். சர்க்கரை நோய் கண்டறியப்பட்டவர்களில் 55% நோயாளிகள் ( 51 பேர்) 40 முதல் 49 வயது பிரிவில் உள்ளனர் என்பது கவலைக்குரியதாக இருப்பதாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவிக்கிறார்.

இந்த ஆய்வில் 20முதல் 29 வயதிலானவர்கள் 47 பேர் இருந்தனர். இவர்களில் 9 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. 30 முதல் 39 வயதில் 16 பேருக்கு சர்க்கரை நோய் கண்டறியப்பட்டுள்ளது. 50 முதல் 59 வயதிலானவர்களில் 16 பேருக்கு ரத்தத்தில் சர்க்கரை அதிகம் இருந்தது.

Also read... அம்பேத்கர் புகைப்படம் வைத்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட வங்கி அதிகாரி வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொரோனா நோயாளிகளில் சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கொரோனா வைரஸ் இன்சுலின் சுரக்கும் கணையத்தை பாதிக்கக் கூடும், உடலில் சுரக்கும் இன்சுலினை பயன்படுத்திக் கொள்ள முடியாத வகையில் உடலில் பாதிப்பு ஏற்படுத்துவது போன்றவை காரணங்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

கொரோனாவுக்கு பிறகு ஏற்பட்டுள்ள சர்க்கரை நோய் தொடர்ந்து உடலில் இருக்குமா அல்லது சில நாட்களில் நீங்கி விடுமா என்பது இன்னும் தெரியவில்லை. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு செயல்படும் அரசு கிளினிக்குகளுக்கு சென்று அடிப்படை பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியமாகிறது என்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவிக்கிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Corona, Diabetes

அடுத்த செய்தி