சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
சென்னை விருகம்பாக்கம் வேம்புலி அம்மன் கோவில் தெரு கமலக்கண்ணன் கார்டன் பகுதியில் ஜெயின் அஷ்ரயா என்ற அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வசிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பின் பின்புறம் ஒரு ஓரமாக பாதுகாப்பற்ற நிலையில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்பின் முதல்தளத்தில் உள்ள ஒரு வீட்டில் நெசப்பாக்கம் பாரதி நகர். பெரியார் தெரு பகுதியைச் சேர்ந்த உஷா என்பவர் வீட்டு வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் உஷா தனது தம்பி செந்தில்குமாரின் 4 வயது மகனான ஹரிஹரன் என்ற சிறுவனை அழைத்துக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்புக்கு வீட்டு வேலை செய்ய வந்துள்ளார்.
இதையும் படிங்க - கூலிப்படையை ஏவி தந்தையை கொலை செய்த வளர்ப்பு மகள் - மதுரையில் பரபரப்பு
அப்போது உஷா வீட்டு வேலை செய்ய, வீட்டு உரிமையாளரின் 1.5 வயது, 3 வயது குழந்தைகள் மற்றும் 4 வயது ஹரிஹரன் ஆகிய குழந்தைகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர்.
சிறிது நேரத்தில் 3 வயது சிறுவன் அழ ஆரம்பித்தவுடன் குடும்பத்தினர்கள் வெளியே வந்து தேடி பார்த்தபோது 4 வயது குழந்தையான ஹரிஹரன் நீச்சல் குளத்தில் மூழ்கி மூர்ச்சையற்ற நிலையில் கிடந்துள்ளான்.
உடனடியாக நீச்சல் குளத்தில் குதித்து அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை நீச்சல் குளத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் குழந்தையில் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையும் படிங்க - ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிராக தீக்குளித்து உயிரிழந்த முதியவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி..
இந்த சம்பவம் குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில், அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த நீச்சல் குளமானது கொரோனா காலத்தில் பயன்படுத்த வேண்டாமென அடுக்குமாடி குடியிருப்புவாசிகளால் முடிவெடுக்கப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் பயன்படுத்தப்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நடைமுறைகள் தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நீச்சல் குளத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் 3 ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்த நீச்சல் குளத்தில் நேற்று முன் தினம் தண்ணீர் நிரப்பியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை குழந்தைகள் மூவரும் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த போது நீச்சல் குளத்தை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது 4 வயது குழந்தை ஹரிஹரன் தவறி நீச்சல் குளத்தில் விழுந்துள்ளார். இதனைபார்த்த மூன்று வயது குழந்தை "ஹெல்ப்... ஹெல்ப்" என அழ ஆரம்பித்துள்ளான்.
குழந்தை அழுவதைப் பார்த்த குடியிருப்பு காவலாளி நீச்சல் குளம் பக்கமெல்லாம் வரக்கூடாது என குழந்தைகளை அழைத்துச் சென்று வீட்டில் விட்டுள்ளார். அப்போது வீட்டில் இருந்தவர்கள் இன்னொரு குழந்தையான ஹரிஹரன் எங்கே? என கேட்டபோது தான் அனைவரும் நீச்சல்குளம் ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அங்கு குழந்தை நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளது என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து நீச்சல் குளத்தை நேரில் சென்று பார்த்தபோது குடியிருப்புவாசிகள் சிலர் பணம் கொடுத்து பிரச்சனையை சரி செய்துவிட்டோம். இங்கெல்லாம் மீடியா வரக்கூடாது என பிரச்சனையில் ஈடுபட்டனர்.
Pre-KG படித்து வந்த சிறுவன் விடுமுறை தினத்தில் வீட்டு வேலை செய்யும் தனது அத்தையுடன் சென்று அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பாதுகாப்பற்ற நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் நெசப்பாக்கம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.