வாட்ஸ் அப் மூலம் புடவை விற்பனை: பெண்களை எச்சரிக்கும் பகீர் ரிப்போர்ட்

சென்னையில் வாட்ஸ்அப் குழு மூலம் புடவை விற்பனை செய்வதாக கூறி பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
ஒரு போன், சில பெண்களின் போன் எண், ஒரு வாட்ஸ் ஆப் குழு, கொஞ்சம் பெண்கள் பயன்டுத்தும் உடைகளின் கலர்புல் போட்டோ இவ்வளவுதான் மூலதனம். சில நாட்களில், சில ஆயிரங்கள் தொடங்கி, பல ஆயிரங்கள் வரை சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிவிடும் மோசடி மன்னன் சென்னையில் சிக்கியுள்ளார்.

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு சரக துணை ஆணையரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்து இருந்தார்.

அதில் வாட்ஸ்ஆப் எண்ணிலிருந்து அறிமுகமான ஒருவர் அவரை தொடர்புகொண்டு குறைந்த விலையில் புடவை உள்ளிட்ட துணிகள் விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.


ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்து புது, புது டிசைன்களிலான புடவை உள்ளிட்ட பெண்கள் அணியும் ஆடைகளின் போட்டோக்களை அனுப்பியுள்ளார். அக்கம்பக்கம் உள்ள பெண்களிடமும் அந்த வாட்ஸ்ஆப் குழு குறித்து தெரிவித்து அவர்களையும் அந்த குழுவில் சேர்த்துவிட்டுள்ளார்.பின்னர் கொரோனா காலம் என்பதால் நேரில் வரமுடியாது, போட்டோவை பார்த்து தேர்வு செய்து, பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தினால் கூரியர் மூலம் துணிகள் வீட்டுக்கு அனுப்பப்படும் என அந்த நபர் கூறியுள்ளார். இதை அடுத்து அவர் சொன்ன வங்கிக் கணக்கில் இந்திரா மற்றும் அவரது தோழிகள் பணத்தை அனுப்பியுள்ளனர்.

பணம் செலுத்திய சிறிது நேரத்தில், அந்த வாட்ஸ்ஆப் குழுவை கலைத்த அந்த நபர், தனது போனையும் சுவிட்ச்ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.இந்திராவின் புகாரைப் பெற்ற புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ்கண்ணா மோசடியில் ஈடுபட்டவரை கண்டுபிடிக்க சைபர் கிரைம் போலீசுக்கு உத்தரவிட்டார். அவர்கள் அந்த நபர் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் வங்கிக் கணக்கு விபரங்களை ஆய்வு செய்தபோது, அவர் தாம்பரம் கல்யாண்நகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதான ராஜேந்திரன் என்பது தெரிந்தது.

அவரை பிடித்து விசாரணை செய்தபோது, மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளம் மூலம் நடுத்தர வயதுடைய, கொஞ்சம் வசதி படைத்த பெண்களின் தொடர்பு எண்களை பெறுவார். பின்னர் அவர்களை ஒரு வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர்த்து, அவர்களுக்கு பிடித்த உடைகள், காஸ்மெட்டிக் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறுவார்.

குழுவில் சுமார் 20 பேர் சேர்ந்த உடன், அவர்களிடம் பொருட்களை தேர்வு செய்யச் சொல்லி, பணத்தை வங்கிக் கணக்கிற்கு செலுத்துச் சொல்லுவார். பணம் வந்த உடன் வாட்ஸ்ஆப் குரூப்பை கலைத்துவிட்டு, போன் எண்ணையும் மாற்றிவிட்டு வேறு எண்ணில், வேறு ஒரு வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி மோசடியை அரங்கேற்ற சென்றுவிடுவேன் எனக்கூறியுள்ளார்.

மேலும், சில நூறுகளில் தொடங்கி சில ஆயிரங்கள் வரை மட்டுமே ஏமாறுவதாலும், கணவருக்கு தெரியாமல் பெரும்பாலான பெண்கள் ஆர்டர் செய்வதாலும் புகார் கொடுக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். சென்னையில் மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உள்ளதாகவும், ஒருவரும் இதுவரை புகார் அளித்ததில்லை என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து அவரிடம் இருந்து 2 செல்போன்கள், 6 சிம் கார்டு உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் ராஜேந்திரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

குறைந்த விலையில் பொருட்களை தருவதாக கூறினாலோ, முன்பின் அறிமுகம் இல்லாத தனிநபர்கள், போலி இணையதளங்களை நம்பி பெண்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
First published: October 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading