• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • லாட்ஜில் ரூம் எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது

லாட்ஜில் ரூம் எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது

கைதான இளைஞர்கள்

கைதான இளைஞர்கள்

சென்னையில் லாட்ஜில் ரூம் எடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்

  • Share this:
சென்னை விருகம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர்கள் சிலர் சுற்றிவருவதாக விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அவர்களை போலீசார் நோட்டமிட்ட போது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதனடிப்படையில் இன்று அதிகாலை விருகம்பாக்கம் போலீசார் இளைஞர்கள் தங்கியுள்ள லாட்ஜூக்கு சென்று சோதனை செய்தபோது அவர்களிடம் 18 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கிருந்த 6 இளைஞர்களையும் போலீசார் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

போலீசாரின் விசாரணையில் கஞ்சா அடிக்கும் பழக்கத்தின் மூலம் தி.நகரை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டு அவர் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என தங்களை கஞ்சா விற்க தூண்டியதாகவும், மேலும் இதற்கு முன் கஞ்சா விற்றதில்லை என தெரிவித்த அவர்கள், பணத்திற்கு ஆசைப்பட்டு  முதன் முறையாக இது போல செய்ததாகவும்  கூறியுள்ளனர்.

மேலும் விக்னேஷ் தங்களை போன் மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட நபர் கஞ்சா பொட்டலத்தை கொடுப்பார் எனவும், அதை பத்திரமான ஓர் இடத்தில் வைத்து, பிறகு மீண்டும் தான் போன் செய்து சொல்லும் நபரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறி உள்ளதாவும் கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கஞ்சாவை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் மாட்டிக் கொள்வோம் என அஞ்சிய மாணவர்கள் லாட்ஜில் அறை எடுத்து அதை பதுக்கி வைத்து சுழற்சி முறையில் கஞ்சாவை பாதுகாத்து வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் இவர்கள் பிடிபட்டது தெரியவந்தது.

மேலும்,  மதுரவாயல், வளசரவாக்கம், தி நகரில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை சிறுசிறு பொட்டலங்களாக்கி தயாராக வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 18 கிலோ கஞ்சா, கஞ்சாவை பொட்டலங்களாக்க பயன்படுத்தபடும் பாலித்தீன் பேப்பர், எடை மெஷின் மேலும் இவர்களிடமிருந்து ரூபாய் 30,000 பணம் மற்றும் மூன்று இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் விக்னேஷை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள ஒரு மாணவர், போலீஸ் எஸ்.ஐ. மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: