கொரோனா பரவல் - மக்களுக்கு சென்னை மாநகராட்சி விடுத்துள்ள எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு தடை.

 • Share this:
  சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா தொற்றை கட்டுப்படுத்த திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூகநலக் கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அனைவரிடமும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர் அனைவரையும் சமூக இடைவெளியுடன் அமர வைக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இதுவரை 60 இடங்களில் விதிமீறல் கண்டறியப்பட்ட நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் அரசின் தடையை மீறி நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் அதிக அளவில் கூடுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அதிக அளவில் பொதுமக்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பொது இடங்களில் தனியார் நிகழ்ச்சிகள், மத வழிபாடுகள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.

  Must Read : வரி வசூலிக்காத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கினால் ஏற்றுக் கொள்வார்களா? உயர் நீதிமன்றம் கேள்வி

  வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published: