கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடல்நிலையை 45 நாட்கள் கண்காணிக்க மருத்துவர்கள் குழு - சென்னை மாநகராட்சி முயற்சி

மாதிரிப் படம்

கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் உடல்நிலையைக் தொடர்ந்து கண்காணிப்பதற்கு மருத்துவர்கள் கொண்ட குழுவை சென்னை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் உடல்நிலையை 45 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க, மருத்துவர்கள் அடங்கிய தனிக்குழுவை நியமித்துள்ளது சென்னை மாநகராட்சி.

  கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த சிலருக்கு தூக்கமின்மை, சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை நீண்ட கால கொரோனா பாதிப்பு என மருத்துவர்கள் அழைக்கின்றனர். இதுபோன்ற பாதிப்பு உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது சென்னை மாநகராட்சி. இதற்காக மாநகராட்சி அலுவலகத்தில் பிரத்யேக மையம் உருவாக்கப்பட்டுள்ளது.

  பயிற்சி பெற்ற 125 தன்னார்வலர்கள், மருத்துவர்கள் ஆகியோர் இம்மையத்தில் இடம்பெற்றுள்ளனர். நோய் தொற்றில் இருந்து மீண்டவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரிக்கின்றனர். அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் தொலைபேசி வாயிலாக தகுந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. தலைவலி, உடல்சோர்வு போன்றவை இருந்தால் அவற்றை குணப்படுத்தும் மருந்துகளும் பரிந்துரைக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  ஒருநாளைக்கு சுமார் நான்காயிரம் பேரை தொடர்பு கொண்டு தேவைகளை கேட்டறிவதாகவும், இதுவரை 20 ஆயிரம் பேரின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களில் 4 முதல் 5 சதவீதம் பேருக்கு நோய் தொற்றின் பிந்தைய பாதிப்பு உள்ளதாக குறிப்பிடும் மருத்துவர்கள், தேவையெனில் மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுவதாக குறிப்பிட்டனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சென்னை மாநகராட்சியின் இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  Published by:Karthick S
  First published: