சென்னையிலுள்ள மெரினா கடற்கரைக்கு பிப்ரவரி 1-ம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு மாத காலமாக கொரோனா மூன்றாவது அலை பரவல் மிகத் தீவிரமாக இருந்தது. தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவல் கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக இருந்தது. கடந்த வாரம் நாள் ஒன்றுக்கு 30,000 பேர் வரை பாதிக்கப்படும் சூழல் இருந்தது. கொரோனா பாதிப்பின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
குறிப்பாக, இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள், வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி மறுப்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில், தற்போது கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. இரவு ஊரடங்கும் திரும்பப் பெறப்பட்டது. பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மெரினா கடற்கரைக்கும் பொதுமக்கள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா தொற்று பரவல் காரணமாக மெரினா, பெசன்ட் நகர் உட்பட சென்னையில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
அரசு பல்வேறு தளர்வுகள் அளித்து ஊரடங்கு உத்தரவை ரத்து செய்துள்ள நிலையில், கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் கூட்டமாக கூட கூடாது, முகக்கவசம் அணிந்து விதிகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும். விதிகளை மீறினால் நடவடிக்கை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.