குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது முதல் தற்போது வரை என்ன மாதிரியான மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?

குழந்தை சுர்ஜித் தவறி விழுந்தது முதல் தற்போது வரை என்ன மாதிரியான மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன?
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்
  • News18
  • Last Updated: October 27, 2019, 10:44 AM IST
  • Share this:
திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது முதல், தற்போது நடக்கும் மீட்புப்பணிகள் வரை என்ன நடந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணிகள், மூன்றாவது நாளாக நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணிக்கு, சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.

6 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், கிணற்றின் 24வது அடியில் சிறுவன் சிக்கியிருப்பதை உறுதி செய்து, கிணறுக்கு அருகே பள்ளம் தோண்டத் தொடங்கினர். பள்ளம் தோண்டிய அதிர்வு காரணமாக சுர்ஜித், ஆழ்துளைக் கிணற்றில் சில அடிகள் கீழே இறங்கியதால் பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி 8 மணிக்கு நிறுத்தப்பட்டது.


இரவு 8.30 மணிக்கு நாமக்கல்லில் இருந்து மீட்புக்குழுவினர் வந்தனர். அதற்கடுத்து மதுரை, கோவை, சேலத்தில் இருந்தும் மீட்புக்குழுக்கள் வந்து சேர்ந்தன. இரவு 10.30 மணிக்கு குழந்தையின் கைகளை, இயந்திரம் மூலம் பிடித்து தூக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஒரு கை நழுவியதால் சிறுவன் சுர்ஜித் மேலும் சில அடிகள் சறுக்கினான்.

அதிகாலை 1.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டும் பணி மீண்டும் தொடங்கப்பட்டது. சிறுவன் மேலும் கீழே சரிய தொடங்கியதும், அப்பணி நிறுத்தப்பட்டது. இதனிடையே சுர்ஜித் 70 அடி வரை கீழே இறங்கி இருந்தான்.

அதிகாலை 3.30 மணிக்கு நடுக்காட்டுப்பட்டிக்கு வந்த சென்னை ஐஐடி குழுவினர், சிறுவனை தூக்க எடுத்த முயற்சி பலன் அளிக்கவில்லை. நேற்று நண்பகல் 12.30 மணிக்கு 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர். அவர்களுடன் 40 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து பணியைத் தொடங்கினர். அவர்களின் முயற்சியும் வெற்றி பெறாத நிலையில், சிறுவன் 100 அடிகளுக்கு கீழே இறங்கினான். இதனால் மேல்பகுதியில் இருந்து மீட்கும் பணி இரவு 9 மணிக்கு முற்றிலுமாக கைவிடப்பட்டது.

Loading...

அதன்பின், ஆழ்துளை கிணறுக்கு அருகே 110 அடிக்கு புதிதாக பள்ளம் தோண்டி, அதில் மீட்புக்குழுவினர் சென்று, குழந்தையை மீட்பது என முடிவெடுக்கப்பட்டது. அதற்காக லால்குடியில் இருந்து கேஎன்ஆர் நிறுவனத்தில் இருந்து அதிகாலை 2.30 மணிக்கு ரிக் இயந்திரம் வரவழைக்கப்பட்டது. ரிக் இயந்திரத்தை பொருத்தும் பணி சுமார் 4.30 மணி நேரம் நடந்து, 6.30 மணிக்கு இயந்திரம் செயல்படுவதற்கு தயாரானது.

சரியாக காலை 7 மணிக்கு ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. இந்த இயந்திரம் மூலம் ஒரு ஆள் இறங்கும் அளவிற்கு ஒரு மீட்டர் அகலத்திற்கு, 110 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டு, அதில் 3 தீயணைப்பு வீரர்கள் சென்று சுர்ஜித்தை மீட்க உள்ளனர்.

தற்போது வரை 30 அடி குழி தோண்டப்பட்டுள்ளது. மேலும், எல்&டி நிறுவனத்துக்கு சொந்தமான ஒரு நவீன எந்திரம் ராமநாதபுரத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

First published: October 27, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...