`மெட்ராஸ்’ என்ற பெயர் வந்தது எப்படி? உலவும் கட்டுக்கதைகளும்... உண்மையும்...!

திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றினார்.

news18
Updated: August 22, 2019, 10:24 AM IST
`மெட்ராஸ்’ என்ற பெயர் வந்தது எப்படி? உலவும் கட்டுக்கதைகளும்... உண்மையும்...!
சென்னையின் பழைய தோற்றம்
news18
Updated: August 22, 2019, 10:24 AM IST
சென்னை... உலகின் பழமையான இரண்டாவது மாநகராட்சி. (முதல் மாநகராட்சி லண்டன்). ஆங்கிலேயர்களின் இந்திய வணிகத் தலைநகரமாக விளங்கியது சென்னை. பழமையின் சுவடுகள் மாறாமல் காலத்துக்கேற்ற புதுமைகளைத் தாங்கி, தற்போது கம்பீரமாய் நிற்கிறது, வந்தோரை வாழவைக்கும் இம்மாநகரம்.

சிறுசிறு கிராமங்களாக இருந்ததுதான் தற்போது இருக்கும் சென்னை மாநகரம். கடற்கரையை ஒட்டிய பகுதி வெங்கடப்ப நாயக்கரின் கட்டுப்பாட்டில் இருந்தது. 379 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது, 1639-ம் ஆண்டு ஆகஸ்டு 22-ம் நாள் கிழக்கிந்திய கம்பெனியின் சார்பாக பிரான்சிஸ் டே மற்றும் ஹென்றி ஹோகன் இருவரும் இணைந்து இந்தப் பகுதியை வாங்கியுள்ளனர். 16000 வராகன் கொடுத்து வாங்கிய கடற்கரையை ஒட்டிய பகுதியில், ஜெயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டி வணிக மையமாக மாற்றினார்கள்.

மதராஸ பட்டினத்தின் சிறு பகுதியை வெங்கட நாயக்கரிடமிருந்து பிரான்சிஸ் டே வாங்கிய இந்த நாளைத்தான் `மெட்ராஸ் டேவாக' (Madras Day) கொண்டாடுகிறோம்.


1996-க்கு முன் சென்னையின் அதிகாரப்பூர்வ பெயராக 'மெட்ராஸ்' என்றே இருந்து வந்தது. திமுக ஆட்சியில் கருணாநிதி முதல்வராக இருந்த போது மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று மாற்றினார்.



பொதுவாக சென்னையின் பெயர்காரணமாக பல கதைகள் சொல்லப்படுகின்றன. பிரான்ஸிஸ் டே வாங்கிய நிலத்திற்கு அருகில் சில மீனவ குடும்பத்தினரும், பிரெஞ்சு கத்தோலிக்க பாதிரியார்களும் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்தக் கிராமத்தின் ரோமன் கத்தோலிக்க தலையாரியின் பெயர் மதராசன் என்றும், அந்த நபரின் பெயரை வைத்தே, 'மதராஸ்பட்டினம்' என்ற பெயர் நிலவி வந்ததாகவும் கூறப்படுகிறது.

Loading...

மதராஸ்பட்டினம் என்ற பெயர் வர, வேறு காரணம் கூறுபவர்களும் இருக்கிறார்கள். சாந்தோமில் வசித்து வந்த போர்ச்சுக்கீசியர்களின் ‘மாத்ரா’ என்னும் செல்வாக்குமிகு குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பிரான்ஸிஸ் டே காதல் வயப்பட்டிருந்தார். தனது காதலியின் குடும்பப் பெயரை வைத்தே இந்த பெயர் சூட்டப்பட்டதாகவும் கதைகள் உலவுகின்றன.

மாதரசன் பட்டினம்தான் மதராஸ் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவிரி பட்டினத்திற்குப் பக்கத்தில், பெண்ணேஸ்வரம் கிராமத்தில் உள்ள பாறையின் கல்வெட்டில் சென்னையைப் பற்றிய குறிப்புகள் இருகின்றன. அந்தக் கல்வெட்டு கி.பி 1369-ம் ஆண்டில் வெட்டப்பட்டது. இந்தக் கல்வெட்டில் கடற்கரை பட்டினங்களான கோவளம், நீலாங்கரையான் பட்டினம், மாதரசன் பட்டினம் என குறிப்பிடப்பட்டுள்ளன.



சென்னைப்பட்டினம் என்கிற ஒப்பந்தம் ஏற்படுவதற்கு 50 வருடத்திற்கு முன்பே டச்சுக்காரர்களால் மதராஸ் என்று சொல்லப்பட்டது. இதை நிரூபிக்கும் விதமாக இந்தக் கல்வெட்டு அமைந்திருக்கிறது. மாதரசன் பட்டினத்தை ஆங்கிலேயர்கள் தங்களின் உச்சரிப்புக்கு  வசதியாக ’மதராஸ்’ என்று அழைத்தார்கள் என்று தொல்லியல் ஆய்வாளர் சுகவன முருகன் கூறுகிறார்.

மாதரசன் பட்டினத்தின் சிறு பகுதியை வாங்கியதற்கான ஒப்பந்தம், இன்றும் சென்னை மியூசியத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

First published: August 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...