கார்களைக் குறிவைத்து திருடி OLX மூலம் விற்பனை செய்த கும்பல்! சிக்கியது எப்படி?

நண்பகல் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

கார்களைக் குறிவைத்து திருடி OLX மூலம் விற்பனை செய்த கும்பல்! சிக்கியது எப்படி?
காரை திருடிய இருவர்
  • Share this:
சென்னையில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களை குறிவைத்து திருடி, அதன் சேஸ் எண் மற்றும் பதிவு எண்ணை மாற்றி ஓ. எல்.எக்ஸ். மூலம் விற்பனை செய்யும் திருடர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகர் 6-வது பிரதான சாலையில் வசித்து வருபவர் சுதர்சனன். கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் காஞ்சிபுரம் சென்று விட்டு நேற்று வீடு திரும்பினர்.


அப்பொழுது வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த இன்டிகா கார் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது தொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைப் பெற்ற திருவான்மியூர் உதவி ஆணையர் ரவி உத்தரவின் பேரில், குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்புகரசன், உதவி ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையில் தனிப்படை அமைத்து காரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், அடையார் இந்திரா நகரில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் நின்றுகொண்டிருந்த கார் மீது சந்தேகமடைந்த போலீசார் கடை உரிமையாளர் பாலமுருகனிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மெக்கானிக் கடையில் நின்றிருந்த கார் திருடப்பட்ட கார் என்பதை பாலமுருகன் ஒப்புக்கொண்டுள்ளார். போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன.

மன்னார்குடியைச் சேர்ந்த பாலமுருகன் சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். சிறு வயதிலிருந்தே மெக்கானிக் வேலை செய்து வரும் பாலமுருகன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத பழைய வாகனங்களை பிரிக்கும் இடத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அப்போது, அங்கு மெக்கானிக் வேலை செய்து வந்த சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த சிராஜுதீன் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் புதுப்பேட்டையில் உடைக்கப்படும் பழைய கார்களின் அசல் ஆர்.சி.புக்கை வாங்கி, பத்திரப்படுத்தினர்.

பின்னர், சென்னையில் வீட்டு வாசல், மற்றும் முக்கிய சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டுள்ள கார்களை நோட்டமிட்டு பின்னர் அந்த பகுதியில் சிசிடிவி இல்லை என்பதை உறுதி செய்துவிட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத போது போலி சாவியை பயன்படுத்தி காரை திருடி வந்துள்ளனர்.

பின்னர், தங்களிடம் உள்ள உடைக்கப்பட்ட பழைய காரின் அசல் ஆர்.சி. புக்கில் உள்ள சேஸ் எண் மற்றும் பதிவு எண்ணை, திருட்டு காருக்கு மாற்றுவார்கள்.

பின்னர்,  ஓ.எல்.எக்ஸ். போன்ற இணையதளங்களில் குறைந்த விலைக்கு யாருக்கும் சந்தேகம் வராத அளவிற்கு விற்பனை செய்து வந்தனர்.வடபழனி, கிண்டி பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரைத் திருடி, அதன் எண்களை மாற்றி, அடையாரில் உள்ள மெக்கானிக் செட்டில் விற்பனைக்காக தயார் படுத்தி வைத்திருந்தபோதுதான் இருவரும் போலீசாரிடம் சிக்கினர். அங்கு திருடப்பட்ட சுதர்சனத்தின் காரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் குற்றப்பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து 3 கார்களை பறிமுதல் செய்தனர்.

நண்பகல் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு சில மணி நேரத்திலேயே குற்றவாளிகளை கைது செய்து, திருடப்பட்ட கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர் .

சென்னை போன்ற பெரு நகரங்களில், காரை வாங்கும் பெரும்பாலோனோர், காரை நிறுத்தும் அளவிற்கு வீட்டில் கார் பார்க்கிங் இருக்கிறதா என்பதை பார்ப்பதில்லை. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து கார் வாங்கும் மக்கள், அதை பாதுகாக்கும் வகையில் குறைந்தது வாடகை கார் நிறுத்தத்திலாவது நிறுத்தி பாதுகாத்தால் மட்டுமேதான் இது போன்று நடைபெறும் திருட்டை தடுக்க முடியும் என்கின்றனர் காவல்துறையினர்.

Also watch: காஷ்மீர் விவகாரத்தில் ரஜினி, கமல் கருத்து! 

First published: August 15, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்