மோசடி வழக்கில் தலைமறைவான சென்னை காவல்துறை அதிகாரிகள் - சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து தேடல்

போலீஸ் அதிகாரிகள்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜேஷ் புகார் அளித்திருந்தார்.

  • Share this:
சென்னையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள காவலர்களை சிபிசிஐடி  போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அய்யபாக்கத்தை சேர்ந்த தொழிலதிபரான ராஜேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி சொத்துக்களை அபகரித்ததாக, காவல் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும், தொழிலதிபர் வெங்கடேஷ் சீனிவாசராவ் ஆகியோர் மீது ராஜேஷ் புகார் கொடுத்துள்ளார்.

புகாரில் நடவடிக்கை எடுக்காததால் இது தொடர்பாக மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராஜேஷ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் காவல்துறை அதிகாரிகள் தொடர்பு இருப்பதால் டிஜிபி அலுவலகத்திற்கு  இந்த புகாரை  சென்னை போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். தமிழக டிஜிபி இந்த புகார் குறித்த முகாந்திரம் இருக்கிறதா என விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு இருந்தார்.

Also Read: தந்தை கொலை வழக்கில் கைதானவர் வெட்டிப்படுகொலை - மர்மநபர்களை தேடும் காவல்துறை

இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உள்ளிட்ட தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்.

விசாரணை செய்ததில் தொழிலதிபர் சீனிவாச ராவ் தான் கொடுத்த கடனுக்காக தொழிலதிபர் ராஜேஷ்-க்கு ரவுடிகள் மூலமும், காவல்துறை அதிகாரிகள் மூலமும் பிரச்னை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக சிபிசிஐடி விசாரணை செய்ததில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு முகாந்திரம் இருப்பதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தமிழக டிஜிபிக்கு விரிவான அறிக்கையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை ஆய்வு செய்த தமிழக டிஜிபி வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் சென்னை திருமங்கலம் காவல் நிலைய உதவி ஆணையர் சிவக்குமார்,  காவல் ஆய்வாளர் சரவணன்,  உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி,பாலா, சங்கர், மற்றும்  அனைத்திந்திய இந்து மஹா சபா கட்சியின் தலைவர் கோடம்பாக்கம் ஸ்ரீ, ஸ்ரீனிவாசராவ், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Also Read: கொங்கு நாடு தலைநகரா எது கொண்டு வரலாம் - நெட்டிசன்கள் கருத்துக்கணிப்பு

குறிப்பாக பொய்யான ஆவணத்தை தயாரித்தல், ஏமாற்றுவதற்காக போலி ஆவணத்தை தயாரித்தல்,பொய்யாக தயாரிக்கப்பட்ட ஆவணத்தை உண்மை என பயன்படுத்துதல்,மோசடி,கூட்டு சதி உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் உதவி ஆணையர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன், காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 10 நபர்களை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் அவர்களை தேடி வருகின்றனர். ஏற்கனவே உதவி ஆணையர் சிவக்குமார் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறார். ஆய்வாளர் சரவணன் தற்போது அரும்பாக்கம் காவல் நிலையத்தில் பணி புரிந்து வந்துள்ளார். உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் இந்த குற்றச்சாட்டு தொடர்பாக முன்னதாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தலைமறைவாக உள்ள காவல் துறையினரை சிபிசிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Ramprasath H
First published: