விலை உயர்ந்த வாகனங்களைத் திருடி விற்ற மாமன் மச்சான்..!

போலியான ஆர்.சி புக் மூலம் ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து மூன்று லட்சம் வரை வெளிமாவட்டங்களில் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

விலை உயர்ந்த வாகனங்களைத் திருடி விற்ற மாமன் மச்சான்..!
திருட்டு
  • News18
  • Last Updated: February 18, 2020, 5:05 PM IST
  • Share this:
மாமனும் மச்சானும் சேர்ந்து சென்னையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைத் திருடி வெளி மாவட்டங்களிலும் வெளிமாவட்டங்களில் திருடப்படும் இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் சென்னையிலும் விற்றது விசாரணையில் அம்பலமானது.

சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையில் வசித்து வருபவர் கபிலன். கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி தனது இருசக்கர வாகனமான ராயல் என்ஃபீல்டு பைக்கை காணவில்லை என சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரம் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதற்காக ரூபாய் 1000 அபராதம் கட்ட வேண்டும் என காவல்துறை தரப்பிலிருந்து இவரது மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த கபிலன் உடனடியாக சூளைமேடு காவல் நிலையத்திற்கு சென்று குறுஞ்செய்தியை காட்டி விபரத்தை கூறி உள்ளார்.


போலீசார் நடத்திய சோதனையில் அபராத குறுஞ்செய்தியானது நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி போலீசாரால் அனுப்பப்பட்டுள்ளது என தெரியவந்தது. மேலும் நெல்லை போலீசாரின் விசாரணையில் பைக்கை ஓட்டி வந்த நெல்லையைச் சேர்ந்த கொம்பையா என்ற நபர் பைக் மற்றும் கார் திருட்டு கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து சூளைமேடு தனிப்படை போலீசார் நெல்லை விரைந்தனர்.கொம்பையாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. நெல்லையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான கொம்பையா, சென்னையில் உள்ள அவரது அக்காவின் கணவர் அருணாச்சலம், மற்றும் நெல்லைப்பகுதியைச் சேர்ந்த வினோத், தில்லை நடராஜன், வானமாமலை ஆகிய ஐந்து நபர்களும் பைக் மற்றும் கார் திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.சென்னையில் வசித்து வரும் கொம்பையாவின் அக்கா கணவரான அருணாச்சலம் உதவியோடு வினோத், தில்லை நடராஜன், வானமாமலை ஆகியோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை திருடி உள்ளனர் என்பதும் தெரியவந்ததுள்ளது.

திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சாலையின் ஓரங்களில் வாரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்படுவதும் பின்னர் நெல்லையிலிருந்து கொம்பையா சென்னை வந்து திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை எடுத்துச் செல்வதும் வாடிக்கையாக இருந்துள்ளது.

இப்படி திருடப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் போலியான ஆர்.சி புக் மூலம் ரூபாய் 50 ஆயிரத்திலிருந்து மூன்று லட்சம் வரை வெளிமாவட்டங்களில் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை திருடி அதனை வெவ்வேறு மாவட்டங்களில் கொண்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

கொம்பையா கொடுத்த தகவலின்படி சென்னையைச் சேர்ந்த விலையுயர்ந்த 6 ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் உட்பட ஏழு இருசக்கர வாகனங்களையும் விலையுயர்ந்த ஆறு கார்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து சென்னை கொண்டு வந்துள்ளனர்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த ஊத்துக்கோட்டையில் மோசடி செய்து லட்சக்கணக்கில் அடமானம் வைத்த 24 விலை உயர்ந்த கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர் அந்த 3 நபர்களும் அருணாச்சலம் மற்றும் கொம்பையாவின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.சென்னையில் திருடப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை வெளி மாவட்டங்களிலும் வெளிமாவட்டங்களில் திருடப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களை சென்னையிலும் இவர்கள் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் இந்த வழக்கின் குற்றவாளியான வானமாமலை என்பவர் புதுக்கோட்டை கொலை வழக்கு ஒன்றில் குற்றவாளியாக போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கிறார் என்பதும் தெரியவந்தது.

இந்த கடத்தல் கும்பலின் முக்கிய குற்றவாளிகளான அருணாச்சலம் வினோத் தில்லை நடராஜன் ஆகியோரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? இவர்கள் என்னென்ன குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
First published: February 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்