90's கிட்ஸ்களின் வாழ்வோடு முடிந்துபோன ஒன்று பாட்டிகள் கதை சொல்லும் பழக்கம். இக்கதைகளை கேட்பதற்கே மிகவும் சுவாரசியமாக இருக்கும். ஆனால் தற்போதைய நவீன காலத்தில் கதை சொல்லும் பாட்டிகள் இருப்பது அரிதாக உள்ளதால், இன்றைய மழலைகளை கைப்பேசியுடன் தான் பார்க்க முடிகிறது.
இந்தநிலையில் பழைய மரபை மீட்டெடுக்கவும் குழந்தைகளுக்கு கதை சொல்லவும் சென்னை புத்தக்காட்சியில் "தும்பி" அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த "குக்கூ காட்டுப்பள்ளி" என்ற சூழலியல் அமைப்பு சிறுவர்களுக்கு கதை சொல்லும் "தும்பி" என்ற சிறுவர் மாத இதழை நடத்தி வருகிறது.
இதில் படம் சொல்லும் கதை என்ற அடிப்படையில் குழந்தைகளுக்கான வண்ண வண்ண படங்களுடன் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. புத்தகங்களில் இடம்பெற்றுள்ள படங்களுக்கான விளக்கம் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது, இக்கதையை படிப்பதால் அதனுள்ளே பயணிப்பது போல் உள்ளதாக வாசகர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த புத்தகங்களின் அடுத்த அத்தியாயத்தில் மூத்த குழந்தைகள் என்ற பிரிவில் பெற்றோர்கள், குழந்தைகளின் உலகை எப்படி புரிந்துக்கொள்வது ? அவர்களுக்கு எப்படி வழிகாட்டியாக இருப்பது போன்ற அரிய தகவல்கள் இடம்பெற்றுள்ள.
தற்போதைய நவீன காலத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கும் சிறுவர்களை, நமது பழைய மரபில் மீட்டெடுக்கும் "தும்பி" நூல் விற்பனையகத்தின் நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.