போன் செய்தால் போதும்... வீடு தேடி வரும் வகை வகையான மதுபாட்டில்கள்... - 2 பேர் கைது

எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, அசோக்நகர், வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, அசோக்நகர், வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

  • Share this:
கொரோனா ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை சென்னையில் மதுபான கடைகள் திறக்க தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் சிலர் சென்னையின் அருகாமை மாவட்டங்களுக்குச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வந்து அவற்றை பன்மடங்கு விலை வைத்து சென்னை மதுபிரியர்களிடம் விற்பனை செய்து வருவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் ஊபர் ஈட்ஸ், சொமோட்டோ போன்ற ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றது. இதனை தடுப்பதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நகர், ஜாபர்கான் பேட்டை, அசோக் நகர், வடபழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக எம்.ஜி.ஆர் நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்களை கண்காணிக்க தொடங்கினர். இந்த நிலையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நபர்கள் இருவர் உணவு டெலிவரி செய்வது போல மதுபானங்களை விற்பனை செய்து வந்ததை அறிந்த போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் ஜாபர்கான்பேட்டை எஸ்.எம்.பிளாக் தெருவில் வசித்து வரும் ஹரி(31) மற்றும் சூளைமேட்டை சேர்ந்த சுந்தர்ராஜ் ( 27) என தெரியவந்தது. மேலும் இவர்கள் இருவருமே சொமோட்டோ மற்றும் ஊபர் ஈட்ஸ் என்ற உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

மேலும் இவர்கள், தங்கள் நிறுவன உடையணிந்து சென்னையின் அருகாமை மாவட்டங்களுக்குச் சென்று மதுபாட்டில்களை வாங்கி வந்து போன் செய்யும் நபர்களுக்கு வீடு தேடி சென்று அதிக விலையில் மதுபாட்டில் சப்ளை செய்ததும் தெரிய வந்துள்ளது.

போலீசார் விசாரணையில் ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நேரத்தில் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க முடியும் என நினைத்து ஆன்லைன் மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இருவரும் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 235 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதே போன்று இன்னும் யார் யார் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்தும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vaijayanthi S
First published: