வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை. ஆனால் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கு ஒரு கும்பல் நூதனமாக ஹவாலா பணத்தை கடத்தி சிக்கியுள்ளது.
எதற்காக சிங்கப்பூருக்கு ஹவாலா பணம் கடத்தப்பட்டது?
சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வந்திருந்த பார்சல்கள் சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்தது. அதை விமான நிலைய சரக சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அதில் 5 பார்சல்கள் சிங்கப்பூரில் உள்ள ஒரே முகவரிக்கு அனுப்புவதாக இருந்தது.
அந்த பார்சல்களில் புடவை, சட்டை, சுடிதார் போன்ற ஆடைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தன. அந்த பார்சல்கள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள், பார்சல்களை அனுப்பிய சென்னை முகவரிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த முகவரிகள் போலியானவை என்று தெரியவந்தன. இதையடுத்து பார்சல்களை பிரித்து பார்த்து சோதனையிட்டனா்.
மேலும் படிக்க...
தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை - இன்றைய நிலவரம் என்ன?
புடவை, சட்டை போன்ற துணிகளும், அதற்கு இடையில் வெளிநாடு மற்றும் இந்திய பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதில் அமெரிக்க டாலா், யூரோ, சிங்கப்பூா் டாலா், ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சிகள் ஒரு கோடியே 6 லட்ச ரூபாயும், இந்திய பணம் 30 லட்சம் ரூபாயும் இருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.
தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சுங்கத்துறை அதிகாரிகள் கூரியர் அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சி மூலம் பார்சல் அனுப்பியவர்களை அடையாளம் கண்டனர். பார்சல்களை அனுப்பிய சென்னையை சோ்ந்த 2 போட்டோ கிராபர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த பணம் ஹவாலா பணம் என்று தெரியவந்துள்ளது. பணம் யாருடையது? சிங்கப்பூருக்கு யாருக்கு, எதற்காக அனுப்பப்பட்டது? என விசாரித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.