மறைமலைநகர் ஃபோர்டு கார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஆயிரக்கணக்கானோர் வெளியே காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியில் இயங்கி வரும் ஃபோர்டு கார் தொழிற்சாலை வருகின்ற ஜூலை மாதம் முதல் மூடப்போவதாக அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் தொழிற்சாலை நிர்வாகத்துக்கும், அரசு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தது .
இந்த நிலையில் இன்று காலை முதல் தொழிலாளர்களுக்கு புதிய படிவம் ஒன்றை வழங்கப்பட்டது. அந்த படிவத்தில் ‘நாங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறோம் ஆனால் எந்த போராட்டத்திலும் ஈடுபட மாட்டோம். நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும் அனைத்து சட்ட விதிகளையும் கடைபிடித்து தொழிற்சாலைக்குள் பணி செய்கிறோம் என உறுதி அளிக்கிறோம்’ என கூறப்பட்டிருந்தது. இந்த படிவத்தை ஏற்க தொழிலாளர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். நேற்று நள்ளிரவு பணிக்கு வந்த தொழிலாளர் மட்டும் 2,000 பேர் தற்போது உள்ளே உள்ளனர்.
மேலும் படிக்க: தேசிய நெடுஞ்சாலைகளில் 25 கி.மீ. இடைவெளியில் அம்மா உணவகம் அமைக்க கோரி வழக்கு
இன்று காலை முதல் ஷிப்ட் பணிக்கு வந்த தொழிலாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என கூறியதால் தொழிற்சாலை எதிரே ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தொழிற்சாலை மூடப்படுவதால் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர்: ராபர்ட் எபினேசர் - செங்கல்பட்டு இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.