Home /News /tamil-nadu /

அருள்வாக்கு, ஆசிர்வாதம்... சர்ச்சை பெண் சாமியாரின் வைரல் வீடியோ... யார் இந்த அன்னபூரணி?

அருள்வாக்கு, ஆசிர்வாதம்... சர்ச்சை பெண் சாமியாரின் வைரல் வீடியோ... யார் இந்த அன்னபூரணி?

அன்னபூரணி

அன்னபூரணி

"உலக மக்களைக் காத்தருள ஆதிபராசக்தி அன்னபூரணி அம்மா அவதாரம் எடுத்து வந்துவிட்டார் வாருங்கள் பக்த கோடிகளே" என்ற போஸ்டர் தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கானோர் விரதம் இருந்து பாதயாத்திரை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் நான் தான் ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி கொள்ளும் பெண்ணின் வீடியோ காட்சிகள் மற்றும் அவரை பற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

"ஆதிபராசக்தி அம்மா" என்று அழைக்கப்படும் அந்த பெண்மணி அலங்கார இருக்கையில் அமர்ந்தவாறு அருள் வழங்கும் வீடியோ சமூக வளைத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. "பராசக்தி அம்மாவின் திவ்ய தரிசனம் உலக மக்களை காத்து அருள ஆதிபராசக்தி அம்மா அவதாரமாக வந்து விட்டாள்.. வாருங்கள் பக்த கோடிகளே" என்று போஸ்டர் அடித்து விளம்பரமும் செய்து வருகின்றனர்.அன்னபூரணி என்ற பெயர் கொண்ட அந்த பெண்மணி பல ஆண்டுகளாக அருள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இவரிடம் மக்கள் ஆசி பெரும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

செங்கல்பட்டு அருகே நேரு நகர் திருப்போரூர் கூட்டு ரோடு சாலையில் உள்ள வாசுகி திருமண மண்டபத்தில் வரும் ஜனவரி 1 ஆம் தேதி திடீர் அம்மன் அன்னப்பூரணி அருள்வாக்கு சொல்ல இருப்பதாக நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதற்காக வாசுகி திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அனுமதி பெற்றிருந்த நிலையில் காவல்துறை சார்பில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவரிடம் ஏதோ பவர் இருப்பதாகவும் அதன் மூலம் மக்களின் நோய்களையும்,கஷ்டங்களையும் குணப்படுத்தி வருவதாகவும் அவரது பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அவர் யார்? எங்கிருந்து வந்தார்?அவர் எப்படி ஆதிபராசக்தியின் அவதாரமாக மாறினார் என்ற விவரங்கள் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் அன்னப்பூரணி அம்மா கடந்த 2014ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனின் நெறியாளராக இருந்த அந்த நிகழ்ச்சியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்காக அன்னப்பூரணி கலந்துகொண்டிருந்தார். அதில் சோக முகத்துடன் அரசு என்பவருடன் ஜோடியாக அமர்ந்துள்ளார் அன்னப்பூரணி. எதிர் வரிசையில் அரசின் மனைவி, அன்னப்பூரணியின் கணவர் ஆகியோர் அமர்ந்துள்ளனர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தை இருக்கும் அரசுக்கும், அன்னப்பூரணிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது தனியாக வசிப்பது வரை சென்றுள்ளது. அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தனது கணவயும் தனது 14 வயது பெண் குழந்தையும் அன்னப்பூரணி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு யார் கண்ணிலும் படாமல் வாழ்ந்து வந்த அன்னப்பூரணி தற்போது ஆதிபராசக்தியின் மறு உருவம் என அழைக்கப்பட்டு சாமியாராக வலம் வருகிறார். முகம் முழுவதும் பேசியல், ஐப்ரோ? த்ரெட்னிங் என அலங்கரித்து கழுத்தில் மாலைகள் அணிந்து பக்தர்கள் புடை சூழ அருளாசி வழங்கும் காட்சிகள் தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : ராஜேந்திர பாலாஜியை நெருங்கியது போலீஸ்.. ரகசியமாக உதவிய இருவர் கைது

இவர் அன்னப்பூரணி அரசு அம்மா என்கிற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் அரசால் அங்கீகரிக்கப்பட்டதா? இதுவரை யாரெல்லாம் நன்கொடை கொடுத்துள்ளார்கள் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. யார் இந்த அன்னப்பூரணி? ஆசிரமம் அமைத்து சாமியார் போல் ஆசி வழங்குவது ஏன்? என பல்வேறு கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அவரின் கருத்தை கேட்க தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, அவர் அழைப்பை ஏற்க மறுத்து விட்டார்.

இந்நிலையில், நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேகமாக இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்த பேட்டியில், மக்களை ஏமாற்றும் அன்னப்பூரணியை தடுத்துநிறுத்த வேண்டும் குறிப்பிட்டள்ளார். ஏமாறும் மக்கள் இருக்கும் வரை அன்னப்பூரணியைப்போன்று ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளில் பல சாமியார்கள் பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கி நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறையில்அடைக்கப்பட்ட சம்பவம் அனைவரும் அறிந்ததே.. இந்த சூழலிலும் தாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொண்டு புதிது புதிதாக சாமியார்கள் கிளம்புவதும். அவர்களிடம் மக்கள் மண்டியிடுவதும், மக்களின் அறியாமையே வெளிப்படுத்துவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
Published by:Vijay R
First published:

Tags: Chengalpattu, Crime | குற்றச் செய்திகள்

அடுத்த செய்தி