• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொரோனா காலத்தில் உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு

கொரோனா காலத்தில் உயிரிழந்த சுகாதார ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு

கோப்புப் படம்

கோப்புப் படம்

சுகாதாரத்துறையை சேர்ந்த 19 பேருக்கு நிவாரண தொகை பரிந்துரை செய்யப்பட்டு அதில் இதுவரை 5 பேருக்கு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த முன் களப்பணியாளர்கள் குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார். அதன் பிறகு ஏப்ரல் 22ம் தேதி அந்த தொகைதொகை 25 லட்சமாக குறைக்கப்பட்ட அறிவிப்பை முதல்வர் வெளியிட்டிருந்தார். கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த முன்களப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் மருத்துவக் காப்பீட்டுத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

கொரோனா பணியில் முன் களத்தில் இருந்து சிகிச்சை அளித்து உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகை சென்றடையவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இதில் கொரோனா காலத்தில் நான்கு அரசு மருத்துவர்கள் உயிரிழந்ததாகவும் ஆனால் அதில் ஒருவருக்கு மட்டுமே 25 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருப்பதாகவும் அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார்.

இது குஈற்த்து அவர் கூறுகையில், " செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அலுவலராக பணியாற்றிய சுகுமாரன் குடும்பத்தினருக்கு 25 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அரசு முதலில் அறிவித்த 50 லட்சம் தொகையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிளாக் மெடிகல் ஆபீசராக பணிபுரிந்த கல்யாணராமன், கொரோனாவால் உயிரிழக்காவிட்டாலும் நீலகிரி மாவட்டம் மலைப்பிரதேசத்தில் கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழந்த இளம் மருத்துவர் ஜெயமோகன், சென்னை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை முடித்து கொரோனா வார்டில் பணி புரிந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் நேரத்தில் தனது அறையில் திடீர் மரணம் அடைந்த பயிற்சி மருத்துவர் ஆகியோரின் குடும்பங்களுக்கும் அரசு அறிவித்த ரூபாய் 50 லட்சத்தை வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் ,”பயிற்சி மருத்துவருக்கு நுரையீரலில் நிமோனியா இருப்பது தெரியவந்தது ஆனால் அவருடைய பிரேத பரிசோதனை அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை. சமீபத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த காவல்துறையினருக்கு உடனடியாக 50 லட்சம் ரூபாய் ரூபாய் கொடுக்கும் அரசு, நினைத்தால் மருத்துவர்களுக்கும் அதனை வழங்க முடியும்" என்று தெரிவித்தார்.

கொரோனா காலத்தில் பணியாற்றி உயிரிழ்ந்த செவிலியர்கள் எத்தனை பேர் என்று அதிகாரபூர்வமாக அரசு அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க மாநிலத் தலைவர் சக்திவேல் கூறுகிறார். இது குறித்து பேசியவர், " செஞ்சி மாவட்டத்தில் பணிபுரிந்த செல்வி என்ற செவிலியரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. அதே போன்று சென்னை மருத்துவ கல்லூரியில் பணிபுரிந்த தங்கலட்சுமி என்ற செவிலியரின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் கிடைத்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் அரசு செவிலியராக பணியாற்றி உயிரிழந்த செவிலியரின் குடும்பத்துக்கு இன்னும் நிவாரண தொகை கிடைக்கவில்லை. இப்படி பலர் இன்னும் நிவாரணம் கிடைக்காமல் உள்ளனர். எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்ற பட்டியலை அரசு அதிகாரபூர்வமாக முதலில் வெளியிட வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

இந்நிலையில் கொரோனா காலத்தில் உயிரிழந்த முன்களப்பணியாளர்களுக்கான நிவாரணத் தொகை விண்ணப்பங்களை சரி பார்க்கும் வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திலிருந்து சுகாதாரத்துறையை சேர்ந்த 19 பேருக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதில் இதுவரை 5 பேருக்கு நிவாரணத் தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க..சசிகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை தேதி வெளியானது

வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலக அதிகாரிகள் கூறுகையில்,”  112 விண்ணப்பங்கள் அனைத்து துறைகளில் இருந்தும் பெறப்பட்டுள்ளன. இதில் 85 சரி பார்க்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 19 பேர் சுகாதாரத்துறையை சேர்ந்தவர்கள். இதில் மூன்று மருத்துவர், நான்கு செவிலியர்கள் அடக்கம். இவர்களில் ஒரு மருத்துவர், இரண்டு செவிலியர், இரண்டு பன்னோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

தமிழக அரசின் அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் பல தனியார் மருத்துவர்கள் கொரோனா காலத்தில் பணியில் உயிரிழந்துள்ளதால் அவர்களுக்கும் அதை வழங்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் எத்தனை மருத்துவர்கள் உயிரிழந்தார்கள் என்ற அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லாத நிலையில் மாநிலத்தில் 89 மருத்துவர்கள் (அரசு மற்றும் தனியார்) உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

மேலும் படிக்க... தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பெட்ரோல், டீசல் விலை

இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் தங்களின் ஒரு நாள் சம்பளத்தை வழங்கி அதன் மூலமாக நிதி திரட்டி உயிரிழந்த 35 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் வீதம் வழங்கியுள்ளனர். மத்திய அரசின் மருத்துவ காப்பீடு தொகையான ரூபாய் 50 லட்சம் தனியார் மருத்துவர்களுக்கும் பொருந்தும் என்பதால் அதனைப் பெறுவதற்கு நாடு முழுவதும் 162 மருத்துவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் சுமார் 20 முன் களப் பணியாளர்களுக்கு இந்த நிவாரண தொகை கிடைத்துள்ளது. அதில் ஒருசில மருத்துவர்களுக்கும் இந்த தொகை கிடைத்துள்ளது. "சிறிய கிளினிக்குகளில் பணிபுரியும் மருத்துவர்கள் கொரோனா காலத்தில் நோயாளிகளின் நேரடி தொடர்பில் வந்ததால் நோய்த் தொற்றுக்கு ஆளாகினர் அவர்களுக்கும் மாநில அரசின் நிவாரண தொகை வழங்கப்பட்டால் உதவியாக இருக்கும்" என்று இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் சி என் ராஜா தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க... புதுச்சேரி குழப்ப அரசியலின் கதை...



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: