CHENGALPATTU DISTRICT ROBBERS ARRESTED FOR CHAIN SNATCHING IN CHENNAI CRIME BIRIYANI FEAST VIDEO VAI
கொள்ளை பணத்தில் கிராம மக்களுக்கு கிடாய் பிரியாணி விருந்து வைத்த வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது
சென்னை தொடங்கி செங்கல்பட்டு வரை,. செயின்பறிப்பில் ஈடுபட்ட சிவில் இன்ஜினியர் மற்றும் பட்டதாரி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.. வழிப்பறிப் பணத்தில் கிராம மக்களுக்கு கிடாய்ப் பிரியாணி விருந்து வைத்தது ஏன்?
சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டாரங்களில், அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை அதிகளவில் செயின்பறிப்பு மற்றும் வழிப்பறி நடப்பதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து அம்பத்தூர் காவல் துணை ஆணையர் மகேஷ் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவிக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வழி்ப்பறியில் ஈடுபட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம், மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதான தமிழரசன் என்ற டேனியல் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அரண்வாயல் கிராமத்தைச் சேரந்த 29 வயதான மணிகண்டன் என்பதும் தெரியவந்தது.
இருவரையும் கைது செய்த போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் பிரபல கட்சி ஒன்றின் உறுப்பினர்கள் என்பதும் 10 ஆண்டுகளாக செயின்பறிப்பு, வழிப்பறியில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடந்த குற்றச் செயல் ஒன்றில் கைதான இருவரும் திருத்தணி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சந்தித்து நண்பர்களாகி உள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் பிணையில் வெளிவந்த பின் அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை செயின்பறிப்பு, வழிப்பறியில் கூட்டாக ஈடுபட்டு வந்துள்ளனர். ஒருவர் இருசக்கர வாகனம் ஓட்ட மற்றவர் பின்னால் அமர்ந்தபடி செயின்பறிப்புகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
அம்பத்தூர், மாங்காடு, குன்றத்தூர் , திருமுல்லைவாயல், பீர்க்கன்கரணை ஆகிய இடங்களில் 10 க்கு மேற்பட்ட பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதை இவர்கள் ஒப்பு கொண்டுள்ளனர். இருவரிடம் இருந்தும் 38 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரில் டேனியல், சிவில் இன்ஜினியர் ஆவார். இவர் மீது கொலை, வழிப்பறி, செயின்பறிப்பு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. மணிகண்டன் பிகாம் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவர் மீது பைக் திருட்டு வழக்குகள் உள்ளன.
டேனியல் தான் கொள்ளையடித்த பணத்தில், சமீபத்தில் தலைவர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அஞ்சூரில், கிராம மக்களுக்கு கிடாய் கறியுடன் பிரியாணி விருந்து படைத்துள்ளார் என்கின்றனர் போலீசார்.
செய்வது குற்றம், ஆனால், தலைவரின் பிறந்தநாளன்று கிடாய் கறிவிருந்தா? அவரே அதை ஏற்றுக்கொள்ளமாட்டார் என போலீசார் டேனியலை கிண்டல் அடித்துள்ளனர். விசாரணைக்கு பிறகு, இருவரையும் போலீசார் சிறையில் அடைந்த்துள்ளனர்.