Home /News /tamil-nadu /

மாமல்லபுரத்தில் உள்வாங்கிய கடல்.. கரையில் ஒதுங்கிய சிற்பங்கள், பழங்காலத்து கோயில் கல்கலசங்கள் - அதிசயித்து பார்த்து சென்ற மக்கள்

மாமல்லபுரத்தில் உள்வாங்கிய கடல்.. கரையில் ஒதுங்கிய சிற்பங்கள், பழங்காலத்து கோயில் கல்கலசங்கள் - அதிசயித்து பார்த்து சென்ற மக்கள்

மாமல்லபுரத்தில் உள்வாங்கிய கடல்

மாமல்லபுரத்தில் உள்வாங்கிய கடல்

Mamallapuram sea | மாமல்லபுரம் மக்கள், சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு சென்று கடலில் மூழ்கிய கோயிலா இது என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    மாமல்லபுரம் கடலோரத்தில் நேற்று மாலை கடல் உள்வாங்கியது. அப்போது பழங்காலத்து கோயில் கல்கலசம், தூண்கள், செங்கல்கள் ஒதுங்கி இருந்ததை பொதுமக்கள் அதிசயித்து பார்த்துச் சென்றனர்.

    செங்கல்பட்டு மாவட்டம்  மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி மாமல்லபுரம் கடற்கரை கோயில் அமைந்துள்ளது . இது கி. பி.8ம் நூற்றாண்டில் (700-728)  கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். அக்காலத்தில் இந்த இடம் ஒரு துறைமுகமாக இருந்தது. அப்போது இந்த இடத்தை இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவன் ஆண்டு கொண்டிருந்தார்.

    இக்கடற்கரைக் கோயிலை 1984- இல் யுனெஸ்கோ நிறுவனத்தால், உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டபப்பட்டவையே. ஒற்றைக்கல் யானை, அருச்சுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.



    மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை 7 அடுக்கு ஸ்தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு அடுக்கு ஸ்தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டிருக்கலாம். மீதமுள்ள 6 கோவில்கள் மற்றும் கட்டுமானங்கள் கடலுக்குள்ளே பலமுறை பார்த்ததாக மீனவர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். கடல் அரிப்பு மற்றும் கடல் உள்வாங்கும் போது சில கட்டிட அமைப்புகள் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் வெளியே தெரியும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுள்ளன.



    இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதி மீனவர்கள் குடியிருப்பு பகுதியில்  கடலோரத்தில் நேற்று மாலை கடல் உள்வாங்கியது. அப்போது பழங்காலத்து கோயில் கல்கலசம், தூண்கள், செங்கல்கள் ஒதுங்கி இருந்தது. இவை கடலில் அடித்து செல்லப்பட்ட 6 கோயில்களில் ஒன்றாக இருக்கலாம் என  அப்பகுதி மீனவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதனால் நேற்று காலையில் இருந்தே உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் அப்பகுதிக்கு சென்று கடலில் மூழ்கிய கோயிலா இது என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகிறார்கள்.



    இதுகுறித்து அப்பகுதி மீனவர் ராஜேஷ் தெரிவிக்கையில், கடந்த 2 நாட்களாக கடல் அரிப்பு காரணமாக , மணல்கள் அப்பகுதியிலிருந்து நீங்கியதால் கடற்கரை கோவிலின் பின்புறத்தில் சில கட்டமைப்புகள் வெளியே தெரிய தொடங்கியது. குறிப்பாக செங்கற்கள் மற்றும் கோவில் தூண்கள் போன்றவை வெளியே தெரிந்தன.



    அதேபோல் சிறியதாக கலசம் போன்ற அமைப்புடைய கோபுரம் போல் வெளியே தெரிந்தால் இது கோவிலாக இருக்கலாம் என,  அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து விட்டுச் செல்கின்றனர். மேலும் கடலில் வெளியே தெரிந்த பானை ஓடுகள் உள்ளிட்டவற்றை அப்பகுதி பொதுமக்கள் எடுத்துள்ளனர், மேலும் ஒரு நாணயமும் இப்பகுதியில் கிடைத்துள்ளது.  அவ்வப்போது இப்பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டாலும் இந்த அளவிற்கு கட்டுமானங்கள் முழுமையாக வெளியே தெரிந்ததில்லை, என தெரிவித்தார்.

    செய்தியாளர் : ராபர்ட் எபினேசர்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Mamallapuram

    அடுத்த செய்தி