கத்தியால் குத்திய பின்னும் தீராத கோபம்... மனைவி மீது 3 முறை காரை ஏற்றி கொலை செய்த கணவன்

Youtube Video

மனைவி கீர்த்தனாவின் கழுத்திலும் இடது மார்பிலும் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதைத் தடுக்க வந்த மாமனார் ஹரியையும் குத்தியுள்ளார்.

 • Share this:
  செங்கல்பட்டு மாவட்டத்தில் கருத்து வேறுபாட்டில் பிரிந்திருந்த மனைவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதோடு நிற்காமல், அவர் மீது 3 முறை காரை ஏற்றிக் கொன்ற டாக்டர் கணவன் விபத்தால் சிக்கியுள்ளார்.

  கோவையைச் சேர்ந்தவர் 30 வயதான கோகுல்குமார்; இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தைச் சேர்ந்த ஹரி என்பவரின் மகள் 26 வயதான கீர்த்தனாவுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. கோகுல்குமார் சென்னைப் புறநகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வந்தார்; கீர்த்தனா, தனியார் மருத்துவமனையில் மனிதவள மேலாளராகப் பணியாற்றி வந்தார்.

  ஓராண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கடந்த ஓராண்டாக கீர்த்தனா தனது பெற்றோருடன் மதுராந்தகத்தில் வசித்து வந்தார். கோகுல்குமார், மேல்மருவத்தூர் அருகே சோத்துப்பாக்கத்தில் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார்.

  வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார் கோகுல்குமார். அப்போது தம்பதி இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கோகுல்குமார் அங்கிருந்த சிறிய கத்தியால், மனைவி கீர்த்தனாவின் கழுத்திலும் இடது மார்பிலும் சரமாரியாகக் குத்தியுள்ளார். அதைத் தடுக்க வந்த மாமனார் ஹரியையும் குத்தியுள்ளார்.

  கீர்த்தனா அவரிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து சாலையில் விழுந்துள்ளார். அப்போது வெளியில் நின்றிருந்த காரை எடுத்த கோகுல்குமார் கீர்த்தனா மீது 3 முறை விடாமல் ஏற்றி இறக்கி கொலை செய்துள்ளார். பின்னர் காருடன் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

  தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கீர்த்தனா சடலத்தை மீட்டனர்; அவரது உடலில் 20க்கும் மேற்பட்ட கத்திக்குத்துக் காயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தது தெரியவந்துள்ளது.

  இதற்கிடையே மனைவியைக் கொலை செய்த பதற்றத்தில் காரை இயக்கிய கோகுல்குமார், அச்சரப்பாக்கம் அருகே, இருசக்கர வாகன ஓட்டி மீது காரை மோதியுள்ளார்; அவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்த அச்சரப்பாக்கம் போலீசார் கோகுல்குமாரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

  மனைவியைக் கொன்ற வழக்கில் மதுராந்தகம் போலீசார் அவரை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர். கருத்துவேறுபாட்டில் பிரிந்த கணவன், மனைவியைக் கத்தியால் குத்தி காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vijay R
  First published: