இரவு நேர ஊரடங்கால் நெடுந்தூர பேருந்துகளுக்கான பயண நேரம் மாற்றியமைப்பு... தென் மாவட்டங்களில் இருந்து காலை நேரங்களில் மட்டும் சென்னைக்கு பேருந்துகள் இயக்கம்...

கோப்புப் படம்

தமிழக அரசு விதித்துள்ள இரவுநேர ஊரடங்கை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அதிகாலை 4 மணி முதல் இரவு 8 மணிக்குள்ளாக இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கினை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவில் இரவு 8 மணி முதல் அதிகாலை 4 மணி வரை வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவைக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகள் அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படாது என்றும், இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யுமாறும் அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.  முன்பதிவு செய்துள்ள பயணிகள் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் கட்டணத் தொகை திரும்பி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  நாடு முழுவதும் வழக்கம் போல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. கூட்டத்தை தவிர்க்கும் வகையில் டிக்கெட் உறுதியானவர்கள் மற்றும் RAC பட்டியலில் இருக்கும் பயணிகள் மட்டும் ரயில் நிலையத்துக்குள் வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நெரிசலை தவிர்க்கும் விதமாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுடன் வருவோருக்கு மட்டுமே பிளாட்பார்ம் டிக்கெட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இரவு நேர ஊரடங்கு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இனி சென்னையில் காலை 5.30 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே மெட்ரோ ரயில்கள் இயங்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

  மேலும் படிக்க... நாடு முழுவதும் ஒரே நாளில் 2.73 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று

  இதற்கு முன்னதாக, காலை 5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரயில் சேவை ஊரடங்கு காரணமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள இடங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: