சென்னை திருமங்கலத்திலுள்ள பிரபல வணிக வளாகமான வி.ஆர் மாலில் கடந்த 21 ம் தேதி அனுமதியின்றி கேளிக்கை நிகழ்ச்சி மற்றும் விடிய விடிய மது விருந்து நிகழ்ச்சி நடப்பதாக அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, போலீசார் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்ததில், பிரேசில் நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற டி.ஜே மந்த்ரா கோரா என்பவரின் ஆடல், பாடலுடன் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றது தெரியவந்தது.
விசாரணையில், வி.ஆர் மாலில் செயல்பட்டு வந்த "மங்கி பார்" உரிமமின்றி செயல்பட்டு வந்தது தெரிந்தது. இதையடுத்து, பாரில் இருந்த 844 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்தனர். இதற்கிடையில், இந்த மது விருந்தில் பங்கேற்ற மடிப்பாக்கத்தை சேர்ந்த மென்பொறியாளர் பிரவீண் குமார்(23) அதிக மதுபோதையில் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
பின், அனுமதியின்றி மாலில் செயல்பட்ட "மங்கி பாருக்கு" அமைந்தகரை வருவாய்த்துறையினர் ‘சீல்’ வைத்தனர். இதுதொடர்பாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்களான நிவாஸ், பாரதி, எட்வின் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி வேட்பாளர்கள் அறிவிப்பு- சி.வி.சண்முகத்துக்கு வாய்ப்பு
மேலும் இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான டி.ஜே நிகழ்ச்சி ஏற்பட்டாளரான அண்ணா நகரைச் சேர்ந்த விக்னேஷ் சின்னதுரை(33), உரிமம் இல்லாமல் பார் நடத்தி வந்த மடிபாக்கத்தைச் சேர்ந்த பவன்(34) கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மார்க் (எ) ரவிந்திரகுமார் ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அம்மூவரையும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.