முகப்பு /செய்தி /தமிழ்நாடு / கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி

கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி

கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி

  • Last Updated :

கப்பலில் வேலை என்று கவுண்டமணியிடம் கூறி செந்தில் ஏமாற்றுவதுபோல், 30 லட்ச ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டு கப்பலில் வேலை வாங்கித் தருவதாக இளைஞர்கள் சிலரை திண்டுக்கல்லைச் சேர்ந்த ஒருவர் ஏமாற்றியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது சித்தயங்கோட்டை நாயக்கர் புதூர் கிராம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து முகமது. இவர் சென்னையில் டான் கன்சல்டன்சி என்ற பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதாகவும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆன்லைனில் விளம்பரம் கொடுத்துள்ளார்.

இதனைப் பார்த்து திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் , கன்னியாகுமரியைச் சேர்ந்த அருண், ஜாக்சன், சித்தையன்கோட்டையைச் சேர்ந்த பரக்கத்துல்லாஹ் மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த பூபேஷ் ஆகியோர் முத்து முகமதை அணுகியுள்ளனர்.

அவர் அனைவருக்கும் லண்டனில் உள்ள கப்பலில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 30 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளனர். ஆனால், பணம் வாங்கி பல மாதங்களாகியும் வேலை வாங்கித் தர எந்த ஏற்பாடும் செய்யவில்லை.

இதையடுத்து, பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே, கடந்த மாதம் இவர்களுக்கு லண்டனில் கப்பலில் பணிபுரிவதற்கான ஆஃபர் லெட்டரை கொடுத்துள்ளார். அதைப் பெற்ற இவர்கள் ஆன் லைனில் சரிபார்த்த போது அந்த ஆஃபர் லெட்டர் போலியானது என தெரிய வந்தது.

போலி ஆஃபர் லெட்டர் குறித்து முத்து முகமதிடம் கேட்டபோது, அது தவறாக வந்து விட்டது என்றும், அனைவரையும் உக்ரைனுக்கு அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

சில மாதங்கள் காத்திருந்தும் எவ்வித அழைப்பும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. பிறகு, மீண்டும் முத்து முகமதை தொடர்புகொண்டு கேட்க முயற்சித்தபோது, அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கடந்த திங்கள்கிழமை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேலிடம் புகார் அளித்தனர். வெளிநாட்டில் கப்பலில் வேலை என்றதும் பணம் கொடுத்து ஏமாந்தவர்களின் புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Also See...

top videos

    First published:

    Tags: Abroad jobs, Cheating case