Home /News /tamil-nadu /

மீண்டும் திரும்பும் வரலாறு… யார் கையில் அ.தி.மு.க? ஓர் அலசல்

மீண்டும் திரும்பும் வரலாறு… யார் கையில் அ.தி.மு.க? ஓர் அலசல்

இபிஎஸ் - ஓபிஎஸ்

இபிஎஸ் - ஓபிஎஸ்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் நடைபெறும் அதிகாரப் போட்டிகளைப் பார்த்தால் பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை, நிரந்த நண்பனும் இல்லை என்ற வாசகம் அ.தி.மு.கவுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒன்றாகத் தோன்றும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 5 minute read
  • Last Updated :
  • Chennai, India
அ.தி.மு.கவின் பொதுக்குழு விவகாரத்தில் நேற்று முன்தினம், ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று உயர் நீதிமன்ற தனிநீதிபதி ஜெயச்சந்திரன் மிக முக்கியத் தீர்ப்பை அளித்தார். அந்தத் தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வத்துக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியாகவே அமைந்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் கனவு கானல் நீராகியுள்ளது.

அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல வழக்குகள் தொடரப்பட்டு தீர்ப்புகள் வந்தன. ஆனால், மற்ற எந்த வழக்குகளையும் விட இந்த வழக்கும், இந்த வழக்கின் தீர்ப்பும் முக்கியமானது. இதுவரையில் நடைபெற்ற வழக்குகள் அனைத்தும் பொதுக்குழுவுக்கு முன்னதாக நடைபெற்ற வழக்கு. இந்த வழக்கு பொதுக்குழு நிறைவு பெற்ற பிறகு, எல்லா கோணத்திலும் ஆராயப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு. எனவே, இந்த தீர்ப்பின் தன்மையே மேல்முறையீட்டிலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பில், ‘அ.தி.மு.கவில் தற்காலிக அவைத் தலைவர் எந்த சூழ்நிலையிலும் பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஜூலை 11 பொதுக்குழு தகுதியான நபராலோ அல்லது 15 நாட்கள் முன்னறிவிப்பு செய்தோ கூட்டப்படவில்லை. ஜூன் 23-ம் தேதிக்கு பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக கூறுவதற்கு எவ்வித அடிப்படையும் இல்லை. அந்த வாதம் கற்பனையானது. கட்சி விதிகளை மீறி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூடி மறைக்கும் வகையில் அந்த வாதம் முன்வைக்கப்பட்டு உள்ளது. ஜூலை 11 பொதுக்குழுவுக்கு தடைவிதிக்காவிட்டால் எடப்பாடி பழனிசாமி அவரது பதவியில் சவுகரியாக அமர்ந்துவிடுவார். ஓ.பன்னீர் செல்வம், வைரமுத்து உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களாகிவிடுவதால் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலில் அவர்கள் போட்டியிட முடியாத நிலை ஏற்படும். கட்சித் தலைமை எடுக்கும் முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேசமயம் அந்த நடைமுறையில் விதிமீறல் இருந்தால் நீதிமன்றத்தில் நிவாரணம் கோர எவ்வித தடையும் இல்லை. அதனால், ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான அம்சங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. மேலோட்டமாக பார்த்தால் இது அரசியல் வழக்காக தோன்றினாலும் அடிப்படையில் இது உரிமையியல் வழக்கு. ஓ.பன்னீர் செல்வத்துகான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவே நீதிமன்றம் கருதியுள்ளது. அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமான சூழல்கள் என்ன?

தற்போதைய சூழலில், சட்ட ரீதியாக பல விவகாரங்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமாகவே உள்ளன. ஜூன் 23-ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு கூட்டம் என்பது அ.தி.மு.க விதிகளின்படி முறைப்படி கூட்டப்பட்டது. ஆனால், ஜூலை 11-ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே பல குளறுபடிகளைக் கொண்டது. தகுந்த நபரால் பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட்டதா? பொதுக்குழுவுக்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டதா? பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் பொதுக்குழு உறுப்பினர்களா? என்ற பல சட்டச் சிக்கல்களைக் கொண்டது. எனவே, இந்த விவகாரங்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகமாவே அமையும் வாய்ப்புள்ளது.

சட்ட அம்சங்களைக் கடந்து அரசியல் ரீதியாகவும் பல விவகாரங்கள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமாகவே உள்ளன. எடப்பாடி பழனிசாமியைவிட ஓ.பன்னீர் செல்வம் பா.ஜ.க மற்றும் மோடிக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். மோடி, அமித்ஷாவின் விருப்பத்தை ஒத்த செயல்களையே செய்யக்கூடியவராகவே ஓ.பன்னீர் செல்வம் உள்ளார். ஓ.பன்னீர் செல்வத்துக்கு பா.ஜ.க நேரடியாக ஆதரவு அளிக்காவிட்டாலும், முன்னர் வழங்கப்பட்டதைப் போலவே தற்போதும் முக்கியத்துவம் அளிப்பது என்பதே பா.ஜ.க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாக உள்ளது என்பதற்கான சாட்சியம். அதைக்கடந்து, சசிகலா, டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணங்கிபோக தயாராக உள்ளனர். ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அவர்களுடன் இணங்கி போவதில் எந்த தயக்கமும் இல்லை. மாநில அளவில் தி.மு.கவும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிர் நிலைப்பாட்டை எடுக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வம் கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது அவரை, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் என்றே மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். தொண்டர்கள் மட்டத்திலும் கணிசமான செல்வாக்கு ஓ.பன்னீர் செல்வத்துக்கு உள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் அவருடைய இயல்பிலேயே எல்லோரையும் அரவணைத்து செல்லும் இயல்பு கொண்டவர். யாரையும் காட்டமாக விமர்சனம் செய்ய மாட்டார். மு.க.ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார். கருணாநிதியை சட்ட சபையில் புகழ்ந்து பேசினார். சசிகலா, தினகரனை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று போர்கொடியை தூக்கிய அவர், தற்போது அவர்களையும் அரவணைக்க தயாராக உள்ளார். எடப்பாடி பழனிசாமியுடனும் இணைந்து பயணிக்கத் தயாராக உள்ளார். இந்த அம்சங்களால் அரசியல் ரீதியாக தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.

எடப்பாடி பழனிசாமியை சுற்றியிருக்கும் சிக்கல்கள் என்ன?

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை கட்சியில் நிர்வாகிகள் மட்டத்தில் மிக வலுவான தலைவராக உள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல வசீகரத் தலைவராக இல்லாவிட்டாலும் நிர்வாகிகள் அனைவரையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துவிட்டார். எனவே, பொதுக்குழுவின் மூலம் கட்சியின் தலைமையை பிடித்துவிடலாம் என்று எண்ணினார். அவர் சறுக்கிய முக்கியமான இடமும் அதுதான். அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக இருக்கலாம். ஆனால், இந்திய அரசமைப்பின் முன்னால் அந்தப் பொதுக்குழு என்பது ஒன்றுமில்லை. இந்திய அரசமைப்பு என்பது நீதி, நிர்வாகம் என்பதை உள்ளடக்கியது. கட்சியிலிருந்து எதிர்ப்பு எழாதவரையில் கட்சி விவகாரம் பொதுக்குழுவுடன் முடிந்துவிடும். எதிர்ப்பு வரும் பட்சத்தில் நீதிமன்றம், நிர்வாகம் தலையிடும் சூழல் ஏற்படும். இந்த இடங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமானதாக இல்லை. பொதுவாக நீதிமன்றங்கள் கட்சி விவகாரத்தில் தலையிடாவிட்டாலும் விதிகள் மீறப்பட்டிருந்தால் நீதிமன்றங்கள் தங்களுடைய கரங்களை நீட்டும். அப்படித்தான் எடப்பாடி பழனிசாமி பின்னடைவைச் சந்தித்துள்ளார்.



பா.ஜ.கவைப் பொறுத்தவரை அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் என்ற இரட்டைத் தலைமையின் கீழ்தான் பயணிக்க விரும்புகிறது. எனவே, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.கவின் ஒற்றைத் தலைமையாக வர முயற்சிப்பது ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, பா.ஜ.கவையும் சேர்த்து எதிர்ப்பதாகவே பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியாக ஓ.பன்னீர் செல்வத்தை மட்டும் எதிர்ப்பது எடப்பாடி பழனிசாமியால் முடியாத காரியமல்ல. ஆனால், பா.ஜ.கவையும் சேர்த்து எதிர்ப்பது என்பது எடப்பாடியால் முடியாத காரியம்.

சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் கட்சியில் சேர ஓ.பன்னீர் செல்வம் விடுத்துள்ள அழைப்பு என்பதை அவருடைய தனிப்பட்ட முடிவாகப் பார்க்க முடியாது. அது பா.ஜ.கவின் விருப்பம் என்றுதான் பார்க்க வேண்டும். சசிகலா, டி.டி.வி.தினகரன் வருகையை பா.ஜ.க விரும்பாவிட்டால் ஓ.பன்னீர் செல்வம் அந்த கருத்தை தெரிவித்திருக்க மாட்டார். எனவே, அது பா.ஜ.கவின் விருப்பமும் கூடத்தான்.

சமீபத்தில் எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் மீது நடைபெற்ற வருமான வரித்துறையின் சோதனையும் மத்திய அரசின் போக்கை மறைமுகமாக சொல்லிவிட்டது. இந்த நெருக்கடிகளை வெறுமனே நிர்வாகிகளின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு வென்றெடுப்பது என்பது எடப்பாடி பழனிசாமியால் எளிதில் முடியாத காரியம். ஒருவேளை நீதிமன்றத்தில் பொதுக்குழுவுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கப்பெற்றாலும் தேர்தல் ஆணையம் என்ற கிணற்றையும் தாண்ட வேண்டியிருக்கும்.

எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரையில் பா.ஜ.கவை மறைமுகமாக எதிர்க்கிறார். சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் தீவிரமாக எதிர்க்கிறார். மீண்டும் இணையலாம் என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பையும் புறக்கணிக்கிறார். இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படும்போது தி.மு.கவையும், மு.க.ஸ்டாலினையும் சீண்டுகிறார். அனைவரையும் எதிரணியில் முன்னிருத்த துணிகிறார். உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி பொதுக்குழுவை வெற்றிகரமாக கூட்டி, அதில் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு சட்ட ரீதியான நெருக்கடிகள் குறையும். ஆனால், அரசியல் ரீதியான நெருக்கடிகள் குறையும் என்பதைச் சொல்ல முடியாது.

அ.தி.மு.க குழப்பங்கள்:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.கவில் நடைபெறும் அதிகாரப் போட்டிகளைப் பார்த்தால் பல பாடங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். அரசியலில் நிரந்த எதிரியும் இல்லை, நிரந்த நண்பனும் இல்லை என்ற வாசகம் அ.தி.மு.கவுக்கென்றே உருவாக்கப்பட்ட ஒன்றாகத் தோன்றும். 2017-ம் ஆண்டு ஒன்றிணைந்த அ.தி.மு.கவிலிருந்து சசிகலாவுக்கு எதிராக குரலை உயர்த்தி கலகத்தைத் தொடங்குகிறார் ஓ.பன்னீர் செல்வம். அப்போது, ஓ.பன்னீர் செல்வம் தனி அணி என்றும் மறுபுறத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருந்தனர். நாட்கள் கழிந்தன. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஒன்றிணைந்து சசிகலா, டி.டி.வி.தினகரனை ஓரம் கட்டினர். அ.தி.மு.க கட்சியை தங்கள் வசப்படுத்தினர்.

தற்போது, வரலாறு மீண்டும் திரும்பும் என்பது போல, எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் அதிகாரப் போட்டி உச்சத்தை எட்டி இருவரும் பிரிந்துள்ளனர். தற்போது, ஓ.பன்னீர் செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஓரே அணியில் ஒன்றிணைவதற்கு ஆயத்தமாகிவருகின்றனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். ஓ.பன்னீர் செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா மூவரும் ஒன்று சேர்ந்தாலும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கட்சி நிர்வாகிகள் பெரும்பான்மையோர் உள்ளனர். ஆனால் கட்சியைக் கைப்பற்றுவது என்பது எடப்பாடி பழனிசாமிக்கு அத்தனை எளிதல்ல. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க எனும் பந்து அங்கும் இங்கும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. சசிகலாவை ஓ.பன்னீர் செல்வம் எதிர்க்கும்போது எடப்பாடி பழனிசாமிக்கு அந்தப் பந்து கிடைத்தது. தற்போது, எடப்பாடி பழனிசாமியை ஓ.பன்னீர் செல்வம் எதிர்த்து பந்தை மீண்டும் கீழே தட்டியுள்ளார். அது யார் கையில் கிடைக்கும் என்பதற்கு காலம் பதில் சொல்லும்.
Published by:Archana R
First published:

Tags: ADMK, AIADMK, Edappadi Palaniswami, OPS, VK Sasikala

அடுத்த செய்தி