வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில், அதிகாலை முதல் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தஞ்சாவூர், பூதலூர், செங்கிப்பட்டி, திருவையாறு, கல்லணை, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் தீபாவளி வியாபாரத்தில் ஈடுபட்ட வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருவதால், விவசாயிகள் மத்தியில் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திங்கள் அன்று கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, ராமாநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறி உள்ளது.
மேலும் படிக்க...
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு....
கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் 9 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில் சேலம், தருமபுரி, திருவாரூர், தூத்துக்குடி, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.