கொரோனா பரவல்; தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பா?

மாணவர்கள் - மாதிப்படம்

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் 12ம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • Share this:
  நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் உச்சகட்டமாக 1.82 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர் மற்றும் மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

  இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உயர் அதிகாரிகள் ஆகியோர் இன்று சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின் மத்திய கல்வித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மே 4-ம் தேதி முதல் ஜூன் மாதம் வரை நடக்கவிருந்த சிபிஎஸ்இ 10-ம் வகுப்புத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மே 4-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் வரை நடக்க இருந்த சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

  தொடர்ந்து, ஜூன் 1-ம் தேதி சிபிஎஸ்இ வாரியம் கூடி, அப்போது நிலவும் சூழல் குறித்து ஆய்வு செய்து முடிவு எடுக்கும். ஒருவேளை சூழல் தேர்வு நடத்த ஏதுவாக இருந்தால், 15 நாட்களுக்கு முன்பாக, தேர்வு குறித்து மாணவர்களுக்குத் தெரிவிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு முறையைக் கணக்கிட புதிய முறையை விரைவில் சிபிஎஸ்இ வாரியம் வெளியிடும். அவ்வாறு வழங்கப்படும் மதிப்பெண்கள் ஏதாவது ஒரு மாணவருக்கு மன நிறைவைத் தரவில்லை என்றால், அந்த மாணவர் தனிப்பட்ட முறையில் பள்ளிக்குச் சென்று முறையிட்டுத் தேர்வு எழுதிக்கொள்ளலாம். அதற்கான சூழல் இருந்தால் தேர்வுகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில் தமிழகத்தில் மே 4ம் தேதி முதல் 21ம் தேதி வரை 12ம் வகுப்பு தேர்வு நடைபெற உள்ளது. எனினும், வேகமாக பரவி வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரை பள்ளிக் கல்வித்துறை தரப்பில் எந்த முடிவும் முடிவும் எடுக்கப்படாத நிலையில் நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் சுகாதாரத் துறை, உள்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

  இந்த கூட்டத்தில் 12ம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் 12ம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: