Home /News /tamil-nadu /

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

மழை

மழை

2 நாட்களுக்கு கேரளா மற்றும் கர்நாடக அரபிக்கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்.

  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

  சேலம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால், நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. சேலம் மாநகரில் கனமழையால் அன்னதானபட்டி, அம்பேத்கர் நகர், வள்ளுவர் நகர் உள்ளிட்ட இடங்களில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. மேலும் அப்பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீருடன் கலந்துள்ளதாக குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், கடந்த 20 ஆண்டுகளாக மழைக் காலங்களில் இதுபோன்ற பிரச்னைகளை சந்திப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

  இதேபோல, பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால், பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவான 72 அடியை எட்டியுள்ளது. பாதுகாப்பு கருதி 3 மதகுகள் வழியாக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டதோடு, சுரங்கப்பாதை வழியாக வினாடிக்கு ஆயிரத்து 300 கனஅடி வெளியேற்றப்பட்டது. உபரி நீர் திறப்பால், கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் கரையோர கிராமங்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை சார்பில் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், பூம்புகார், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான தாமரைக்குளம், ஓட்டக்கோவில், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. புதுச்சேரியில் காலாப்பட்டு, அரியாங்குப்பம், தவளகுப்பம், மடுகரை உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

  இந்நிலையில், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் வட மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் எனவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  Must Read : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சிறுவன் சித்திரவதை செயப்பட்டு கொலை : தாய் உள்ளிட்ட 3 பேர் கைது

  சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், 2 நாட்களுக்கு கேரளா மற்றும் கர்நாடக அரபிக்கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Rain, Rain Forecast, Rain water

  அடுத்த செய்தி