தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

மழை

தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு பெரும்பாலான இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழையும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 • Share this:
  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் இரவு முழுவதும் மழை பெய்தது. சென்னை கிண்டி, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு பரவலாக மழை பெய்தது. இதேபோல், சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம், பெருங்குடி, செம்மஞ்சேரி, நீலாங்கரை, கொட்டிவாக்கம், மேடவாக்கம், சித்தாலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

  திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் 18 மில்லிமீட்டர் மழையும், சோழவரம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் 14 மில்லிமீட்டர் மழையும், செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 19.4 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. பூண்டி நீர்த்தேக்கம் பகுதியில் 4 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்மரம்பாக்கம், புழல், பூண்டி நீர்த்தேக்கம் வேகமாக நிரம்பி வருகிறது.

  திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. குறிப்பாக மாநகர பகுதியான வண்ணாரப்பேட்டை, பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, மேலப்பாளையம், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது.

  மேலும் படிக்க...மருத்துவக் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளான கண்ணமங்கலம், சேவூர், இரும்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடர் மழையால் அங்குள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

  இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் பதிவான மழை விவரம்

  கடலூர் 82 மி.மீ மேற்கு தாம்பரம் 69.5 மி.மீ செம்பரம்பாக்கம் 59.75 மி.மீ புதுச்சேரி 54 மி.மீ.

  அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vaijayanthi S
  First published: