Home /News /tamil-nadu /

தமிழகத்தில் கொட்டிய கனமழை... இன்றும் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் கொட்டிய கனமழை... இன்றும் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Weather Update : வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் ஒரு வாரம் முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

  வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, தொப்பூர், சிந்தல்பாடி, சந்தப்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நேற்று கன மழை பெய்தது. மேலும், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென்காசி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி பகுதிகளிலும், கரூர், திருச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு, கர்நாடகா, கேரளா அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் 19ம் தேதி வரை மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இந்நிலையில், அந்தமான் கடல் பகுதியில் தென்மேற்குப் பருவமழை நேற்று தொடங்கியுள்ளது. ஏற்கனவே கணிக்கப்பட்டபடி, ஒரு வாரம் முன்னதாகவே பருவமழை தொடங்கியுள்ளது. இதேபோல, கேரளாவில் 4 நாட்கள் முன்னதாக, வரும் 27-ம் தேதி பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழகத்தில் நேற்று காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாவது நாளாக கனமழை கொட்டித் தீர்த்தது. செவிலிமேடு, ஓரிக்கை, வாலாஜாபாத், ஒரகடம், ஶ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. , திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர். அப்ச‌ர்வேட்ட‌ரி, மூஞ்சிக்கல், ஆனந்தகிரி, அண்ணாசாலை, பேருந்து நிலையம், ஏரிச்சாலை, செண்பகனூர், பெருமாள் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்தது, மழைகாரணமாக பனிமூட்டங்கள் விலகி மிதமான குளிர் நிலவியது.

  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்தது. காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. ஆரணி அருகே சங்கர் என்ற விவசாயி வீட்டின் கொட்டகையில் கட்டப்பட்டிருந்த பசு மாடு இடி, மின்னல் தாக்கியதில் உயிரிழந்தது. மேலும் அவரது வீட்டின் மின்சாதன பொருட்களான டிவி, குளிர்சாதனப் பெட்டி போன்றவை இடி தாக்கி வெடித்து சிதறியதில் கைக்குழந்தை உட்பட 5 பேர் காயமடைந்தனர்.

  Must Read : அரக்கோணம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள்.. ரயில் சேவை மாற்றம் குறித்த தகவல் தெரிந்துக்கொள்ளுங்கள்

  திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், பச்சக்குப்பம், ரெட்டி தோப்பு மற்றும் ஆலங்காயம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது. ரெட்டித்தோப்பு ரயில்வே சுரங்கப் பாதையின் கீழ் மழைநீர் தேங்கியதால் அவ்வழியாக சென்ற ஆட்டோ ஒன்று அதில் சிக்கிக் கொண்டது.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூர் காவேரிப்பட்டிணம், பர்கூர், போச்சம்பள்ளி, ராயக்கோட்டை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. திடீரென கொட்டித் தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது. சப்பாத்து தரைப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் சென்று கொண்டிருக்கும் நிலையில் ஆபத்தை உணராத மக்கள் தடையை மீறி பாலத்தை கடந்து வருகின்றனர்.

  Read More : நெல்லை கல்குவாரி விபத்து.. பாறை இடுக்குகளில் இருந்து லாரி கிளீனர் முருகன் சடலமாக மீட்பு.. தொடரும் சோகம்

  வேலூர் மாவட்டத்தில் பொன்னை அடுத்த கன்னிகாபுரம், மிளகாய்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பெய்த கனமழையால் சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் சேதமடைந்தன. நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கி மீண்டும் முளைக்கும் நிலையில் இருப்பதால் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென பெய்த கனமழையால் குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவியது.

   
  Published by:Suresh V
  First published:

  Tags: Rain, Rain Forecast, Southwest monsoon, Weather News in Tamil

  அடுத்த செய்தி