சென்னையில் கடந்த ஒரு மாதமாக வறண்ட வானிலையே காணப்பட்டு வந்த நிலையில், நேற்றிரவு பரவலமாக மழை பெய்தது. ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரத்தில் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மழை காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கின. கொளத்தூர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு ஒரு மணியளவில் மிதமான மழை பெய்தது. இதனிடையே, வளிமண்டல மேலடுக்கில் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் இருந்து வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மாலை 3 மணிக்கு மேல் வெயிலுடன் சேர்ந்து லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் இரவு 10 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் திடீர் மழையால் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஸ்ரீபெரும்புதூர் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அன்னமங்கலம், அரசலூர், தொண்டமாந்துறை, கோரையாறு, மலையாளப்பட்டி உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. இதனால் அன்னமங்கலம், தொண்டாமாந்துறை கிராமங்களில் நெல்கொள்முதல் நிலைய வாயில்களில் பாதுகாக்கப்பட்டிருந்த நெல் மழையில் நனைந்தது.
சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான அயோத்திபட்டனம், ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், வீரகனூர் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வீடியோ
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்