நூதனக் கொள்ளைகள்: அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- சைலேந்திர பாபு முன்னிருக்கும் சவால்கள் என்னென்ன?

சைலேந்திர பாபு

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ள  சைலேந்திரபாபுவின் முன்பு இருக்கும் சவால்கள் என்னென்ன? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

  • Share this:
    களத்தில் இறங்கி சேவை செய்வதில் தமிழ்நாடு காவல்துறை உயரதிகாரிகள் மட்டத்தில் சைலேந்திரபாபுவை அடித்துக்கொள்ள ஆள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மழை, புயல், மீட்புப் பணி, சைக்கிள் பந்தயம் என அனைத்திலும் சைலேந்திர பாபு பலருக்கும் முன்னுதாரணமாகச் செயல்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் நடக்கும் நூதனமான குற்றங்களை அரங்கேற்றுவதில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் கைவரிசையை காட்டி வருகிறார்கள். வெளிமாநில கொள்ளைக் கும்பலின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, குற்றங்களை தடுக்க வேண்டியது சைலேந்திரபாபுவின் முன்பு இருக்கும் முதல் சவால்.

    பல இடங்களில் போலீசார் - பொதுமக்கள் இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளன. இதை மாற்றி, பொதுமக்களும், போலீசாருக்கும் இடையே நல்லுறவைப் பேண வேண்டியது புதிய டிஜிபின் முன்பு இருக்கும் இரண்டாவது சவால்..

    வேகமாக அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை விசாரிக்கத் தேவையான உரிய காவல் கட்டமைப்பை உண்டாக்குவது, ஆய்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து நடவடிக்கை துரிதப்படுத்த வேண்டியது சைலேந்திரபாபுவின் முன்பு இருக்கும் 3வது சவால்.

    தமிழ்நாட்டில் தினமும் தோராயமாக 8லிருந்து 10 கொலை சம்பவங்கள் பதிவாகின்றன. கொள்ளை, திருட்டு என பொருளாதாரம் தொடர்புடைய குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. இவ்வகை குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டியது டிஜிபியின் முன்பு இருக்கும் 4வது சவால்.

    தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்தி, அப்பிரிவுகளுக்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளை மாநிலம் முழுவதும் நியமித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது 5வது சவால்.

    என்னதான் தமிழ்நாடு காவல்துறை துப்பறிவுத்திறன், விளையாட்டு திறன், ஒழுக்கம் ஆகியவற்றில் முதன்மையாக இருந்தாலும், நவீனமயமாக்கலில் இன்னும் எட்டவேண்டிய உயரம் அதிகம். காவல்துறையை நவீனப்படுத்துவது சைலேந்திர பாபுவின் முன்பு இருக்கும் 6வது சவால்.

    தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 6,779 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதுடன், 124 பேரின் உயிரை பெருந்தொற்று காவு வாங்கியுள்ளது. இந்த நிலையில், எதிர்வரும் நோய்த்தொற்றுப் பரவலைக் கருத்தில் கொண்டு, காவல்துறையின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படாமல், அதேசமயம் காவலர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, துறையை முன்னெடுத்துச் செல்வது சைலேந்திரபாபுவின் முன்பு இருக்கும் 7வது சவால்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    எப்போதும் மிடுக்குடன் நடைபோடும் புதிய டிஜிபி சைலேந்திரபாபு, இந்த சவாலான தருணத்தில் தமிழ்நாடு காவல்துறையை சிறப்பாக வழிநடத்துவார் என்பதே அனைவரது நம்பிக்கையாகவும் உள்ளது.
    Published by:Karthick S
    First published: