ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எடப்பாடி பழனிசாமியின் முன்னிருக்கும் சட்டச் சிக்கல்கள், அரசியல் நெருக்கடிகள் என்னென்ன? ஓர் அலசல்

எடப்பாடி பழனிசாமியின் முன்னிருக்கும் சட்டச் சிக்கல்கள், அரசியல் நெருக்கடிகள் என்னென்ன? ஓர் அலசல்

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

ADMK | அ.தி.மு.கவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும் அவர் முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

திமுக-வில் இருந்து நீக்கப்பட்டு அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் உருவாக்கிய போது கட்சியை கட்டுக்கோப்பாக நடத்த உறுதியான தலைமை முக்கியம் என்று எண்ணிய அவர், மற்ற கட்சிகளில் இருப்பது போல செயற்குழு உறுப்பினர்கள் அல்லது பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் பொதுச் செயலாளர் அல்லது தலைவர் பதவிகளை தேர்வு செய்வது சரியாக இருக்காது என்று நினைத்தார். மூத்த வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து பொதுச் செயலாளரை தேர்வு செய்வர் என்ற விதிமுறையை புகுத்தினார்.

இதுதவிர, அ.தி.மு.க-வின் சட்ட விதிகளுக்கு விலக்கு வழங்கும் அதிகாரத்தையும் பொதுச் செயலாளருக்கு வழங்கினார். அதிமுகவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுச் செயலாளருக்கான தேர்தல் நடைபெற்று வந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருந்தவரை இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஓட்டெடுப்புக்கு அவசியம் ஏற்படவில்லை. ஜெயலலிதா 1988, 1989, 1993, 1998, 2003, 2008, 2014 ஆகிய ஆண்டுகளில் ஏழு முறை பொதுச் செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரது மறைவுக்கு பிறகு சசிகலா இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவால் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா, மீண்டும் கூட்டப்பட்ட அதேபோன்ற ஒரு பொதுக்குழுவால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நீக்கப்பட்டார்.

அ.தி.மு.கவை எம்.ஜி.ஆர் தொடங்கியிருந்தாலும், அக்கட்சியின் தலைவராக நீண்ட காலம் இருந்து கட்சியை கட்டுக்கோப்புடன் வலுவாக கட்டிக் காத்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே இரண்டாம் கட்டத் தலைவர்கள் யாரும் அடையாளப்படுத்தப்படாமல் இருந்ததன் விளைவை அக்கட்சி அனுபவித்துக் கொண்டிருக்கிறது.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பல்வேறு பின்னடைவைச் சந்தித்துவருகிறது அ.தி.மு.க. ராணுவக் கட்டுப்பாடுள்ள கட்சி என்று வர்ணிக்கப்பட்ட ஒரு கட்சி தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது யாருக்குமே தெரியாத ஒன்றாக உள்ளது.

Also Read | ஜெயலலிதா சொத்துகளுக்கு குறி… காளான் போல முளைக்கும் புதுப்புது உறவுகள்! இதுவரை நடந்தது என்ன?

அ.தி.மு.க நிர்வாகிகள் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.  பொதுச்செயலாளராக கட்சி அறிவிப்பினையும் வெளியிடத் தொடங்கவிட்டார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அந்தப் பதவிக்கான சட்ட அங்கீகாரம் என்ன என்பது இதுவரையில் கேள்விக் குறியாகவே உள்ளது. அவருடைய பொதுக்குழு கூட்ட வெற்றி என்பது இடைக்கால வெற்றியாகவே அரசியல் வல்லுநர்களால் பார்க்கப்படுகிறது. ஒருபுறம் அவர் பொதுச் செயலாளராக நியமிக்கப்படும் அதே நேரத்தில் அ.தி.மு.கவின் தலைமைக் கழகம் அரசால் சீல்வைக்கப்பட்டது. எனவே, நேற்றைய வெற்றியைக் கூட முழு வெற்றி அல்ல என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அ.தி.மு.க அலுவலகத்தின் சாவியைத் தரக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பும் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்தப் பிரச்னைக்கான தீர்வு உடனே கிடைக்குமா என்பது கேள்விகுறிதான். ஜெயலலிதா, ஜானகி இடையை பிரச்னை ஏற்பட்ட போது இதேபோல அ.தி.மு.க அலுவலகம் அரசால் பூட்டப்பட்டது. பின்னர், சுமார் 8 மாதங்கள் கழித்தே அலுவலகம் திறக்கப்பட முடிந்தது. தற்போது, அதுபோன்ற சூழ்நிலையே உள்ளது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஏனென்றால் கட்சி நிர்வாகிகள் ரீதியாக எடப்பாடி பழனிசாமி வலிமையாக இருந்தாலும், சட்ட விவகாரங்களில் ஓ.பன்னீர் செல்வத்தின் தரப்பின் கையே ஓங்கியிருக்கிறது.

கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு கிடைக்கும் சட்ட அங்கீகாரத்தைப் பொறுத்தே எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு அங்கீகாரம் கிடைக்கும். எம்.எல்.ஏ, எம்.பிக்களைப் பொறுத்தவரையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் தற்போதைக்கு அவரைச் சேர்த்து 3 எம்.எல்.ஏக்கள், ஒரு மக்களவை எம்.பி, ஒரு மாநிலங்களவை எம்.பியின் ஆதரவு ஓ.பன்னீர் செல்வத்துக்கு உள்ளது. எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை 60-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ, ஒரு சில மாநிலங்களவை எம்.பிக்களின் ஆதரவைக் கொண்டுள்ளார். இதுவரையில் நீதிமன்ற வாயில்களிலேயே நடைபெற்று வந்தப் போராட்டம் தற்போது தேர்தல் ஆணையக் கதவுகளையும் எட்டியுள்ளது.

கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்ட விவகாரத்தில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க எடப்பாடி பழனிசாமி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய நேரத்தில், அதற்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் எந்த முடிவு எடுக்கும் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது. தற்போதைய நிலையில் நிர்வாகிகள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் எடப்பாடி பழனிசாமி அதிகமாக இருப்பதால் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான அறிவிப்பை வெளியிடும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

2017-ம் ஆண்டில் சசிகலா தரப்பில் 100-க்கும் மேல் எம்.எல்.ஏக்கள் நிர்வாகிகள் இருந்தபோது, 11 எம்.எல்.ஏக்களைக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் குரலுக்கு தேர்தல் ஆணையம் செவிசாய்த்தது.

சட்டச் சிக்கல்கள் மட்டுமல்ல அரசியல் நெருக்கடிகளையும் எடப்பாடி பழனிசாமி எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அ.தி.மு.க விவகாரத்தில் பா.ஜ.க, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவாகவே இருப்பதாக சூழல்கள் தெரிகின்றன. எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவியேற்றதற்கு ராமதாஸ், ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்ததாக எடப்பாடி பழனிசாமி அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதேநேரத்தில் அண்ணாமலையும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமியோ அல்லது அண்ணாமலையோ அதனை உறுதிப்படுத்தவில்லை. எனவே, பா.ஜ.க சார்பில் எடப்பாடி பழனிசாமியின் பொதுச் செயலாளர் நியமனத்திலிருந்து விலகி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

முக்கியமாக ஓ.பன்னீர் செல்வம் சமூகம் சார்ந்த மக்கள் எடப்பாடி பழனிசாமியை ஒற்றைத் தலைமையாக ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி இருந்துவருகிறது. நிர்வாகிகளை தன் பக்கம் ஈர்த்தாலும், தொண்டர்களையும் பொதுமக்களையும் ஈர்ப்பது அத்தனை எளிதானதல்ல.

எனவே, அ.தி.மு.கவின் அடுத்த செயல்பாடுகள் இன்னும் சில மாதங்களுக்கு தமிழக அரசியல் களத்தை பரபரப்பாகவே வைத்திருக்கும். பொதுச் செயலாளராக பதவியேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமி இன்னும் நிறைய சவால்கள் காத்திருக்கின்றன என்பதே உண்மை.

First published:

Tags: ADMK, Edappadi Palaniswami, O Panneerselvam