தூத்துக்குடியில் விபத்து நாடகமாடி தாய், மகனை அரிவாளால் வெட்டி வழிப்பறி...

தூத்துக்குடியில் விபத்து நாடகமாடி தாய், மகனை அரிவாளால் வெட்டி வழிப்பறி...

மாதிரிப்படம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, விபத்து போன்று நாடகம் நடத்தி இருசக்கர வாகனத்தில் வந்த தாய், மகனை அரிவாளால் தாக்கி நகை, செல்போனைப் பறித்துச் சென்றுள்ளது ஒரு கும்பல்.

 • Share this:
  தூத்துக்குடியில் இரவில் இருசக்கர வாகனத்தில் உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த அம்மாவையும் மகனையும் மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி, நகை பறித்துள்ளனர். 

  விருதுநகர் மாவட்டம் பரளச்சி கிராமத்தை சேர்ந்தவர் சோலையம்மாள். ‌இவரது மகன் ரமேஷ் அரவிந்த். இருவரும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடாங்கிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு புதன்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். தூத்துக்குடி மாவட்ட எல்லையான கீழ அருணாசலபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, ‌சாலையில் ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு அருகில் 2 இருசக்கர வாகனங்களும் சில நபர்களும் நின்று கொண்டிருந்தனர்.

  அதைப் பார்த்த தாயும் மகனும், ‌ விபத்து நடந்திருப்பதாக நினைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்திலிருந்து கீழே இறங்கியுள்ளனர். தரையில் அமர்ந்திருந்தவரிடம் என்ன நடந்தது என விசாரித்துக் கொண்டிருந்தபோது, நின்று கொண்டிருந்த நபர்கள் அரிவாளால் தாய், மகனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.

  மேலும் சோலையம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஒரு பவுன் தாலி, ‌8 கிராம் கம்மல் ‌ ஆகிவற்றை பறித்துள்ளனர். ரமேஷ் அரவிந்த் வைத்திருந்த செல்போனையும் பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடி விட்டனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவங்களால் அதிர்ச்சியடைந்த தாயும் மகனும் செய்வதறியாமல் திகைத்துப் போய்விட்டனர்.

  சிறிது நேரத்தில் அந்த வழியாக சென்றவர்கள். புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காயமடைந்த இருவரையும் மீட்டு புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக இருவரும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மேலும் படிக்க...நடிகை டாப்சி வீட்டில் தொடரும் சோதனை...

  விபத்து போன்று நாடகம் நடத்தி தாய் மற்றும் மகனை அரிவாளால் தாக்கி, நகை பறித்துச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: