கொரோனா 2ஆம் அலை பரவலில் மத்திய அரசு மாநில அரசுகளை கண்டு கொள்ளாமல் கைவிட்டுவிட்டது: கொங்கு ஈஸ்வரன் குற்றச்சாட்டு

கொங்கு ஈஸ்வரன்

ஆக்ஸிஜன் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறிய போதும் கூட மத்திய அரசு உதவிகரம் நீட்ட முன்வரவில்லை. மாநில அரசுகளை தடுமாற்றத்தில் விட்டுவிட்டு மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

 • Share this:
  கொரோனா இரண்டாம் அலை பரவலில் மத்திய அரசு மாநில அரசுகளை கண்டு கொள்ளாமல் கைவிட்டுவிட்டது என திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான ஈஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  இதுதொடர்பாக ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா முதல் பரவலின் போது பல முன்னேற்பாடுகளை வகுத்து செயல்படுத்திய மத்திய அரசு இரண்டாம் பரவலின் போது அமைதியாக இருக்கிறது. அனைத்து முன்னேற்பாடுகளையும் அந்தந்த மாநில அரசுகளே முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றன. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறிய போதும் கூட மத்திய அரசு உதவிகரம் நீட்ட முன்வரவில்லை. மாநில அரசுகளை தடுமாற்றத்தில் விட்டுவிட்டு மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது கடும் கண்டனத்திற்குரியது.

  மாநில அரசுகள் கொரோனா இரண்டாம் அலையின் இக்கட்டான சூழ்நிலையை சமாளித்து ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சரி செய்தன. அதேபோல தடுப்பூசிகளும் மத்திய அரசிடம் இருந்து மாநில அரசுகளுக்கு சரியான நேரத்தில் கிடைக்கவில்லை. கொரோனா முதல் பரவலை விட இரண்டாம் பரவல் மிகவும் அதிதீவிரமான பாதிப்பையும், கிராமப்புறங்களில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.

  தொழில்துறையினருக்கு முதல் பரவலின் போது மத்திய அரசிடமிருந்து கிடைத்த சலுகைகள் இரண்டாம் பரவலின் போது கிடைக்கவில்லை. மொத்தமாகவே கொரோனா இரண்டாம் பரவலை மத்திய அரசு மாநில அரசுகளை மட்டுமல்ல நாட்டு மக்களையும் கைவிட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற முன்கள பணியாளர்கள் முதல் பரவலில் பணியாற்றியது போல இரண்டாவது பரவலில் 10 மடங்கு வேகமாக பணியாற்றி கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றின் வீரியமும், தாக்கமும் அந்தளவுக்கு இருக்கிறது. என்ன செய்வதென்று மக்கள் தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் கூட பிரதமரிடம் இருந்து ஒரு ஆறுதல் வார்த்தை கூட வரவில்லை.

  பொருளாதார வளர்ச்சி பாதித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவினால் வேலையிழப்பு அளவுகடந்து இருக்கிறது. ஆனால் மத்திய அரசோ, பாரத பிரதமரோ இதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. தமிழகம் சந்தித்திருக்கின்ற பாதிப்புக்கு மத்தியிலிருந்து 4 அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து தங்கியிருந்து தமிழக அரசிற்கு உறுதுணையாக இருந்து உதவி செய்திருக்க வேண்டும்.

  தமிழ் எனக்கு பிடித்த மொழி என்றும், தமிழ் கலாச்சாரத்தின் மீது எனக்கு பற்று உண்டு என்றும், போகின்ற இடத்தில் எல்லாம் திருக்குறளை சொல்வதாலும் தமிழர்களை காப்பாற்றி விட முடியாது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் பிரதமர் தமிழகத்தின் மீது தனி கவனம் செலுத்தி உதவ முன் வந்திருக்க வேண்டும். மற்ற மாநிலங்களுக்கு கொடுத்த விகிதாச்சாரப்படி கூட தமிழகத்திற்கு தடுப்பூசி தரப்படவில்லை. மற்ற மாநிலங்களோடு சரி சமமாக கூட தமிழகம் கவனிக்கப்படவில்லை என்பது வேதனையானது என்று அவர் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Esakki Raja
  First published: