தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்த மத்திய அரசு!

மு.க.ஸ்டாலின், மோடி

தமிழகத்திற்கு 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீட வேண்டும் என பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

 • Share this:
  தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

  முன்னதாக, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசி வாயிலாக பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும்படி கோரிக்கை விடுத்தார். இதுதொடர்பாக ஒன்றிய அரசுக்கு தமிழக அரசும் துணை நிற்கும் என பிரதமருக்கு உறுதியளித்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் தொடர்பாக, மாநிலத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

  இதைத்தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பரிசோதனைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து, அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தொற்றால் அதிகம் பாதிக்கப்படாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்க செய்து கண்காணிப்பதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

  இதையடுத்து, முதல்வரின் கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்திருந்த நிலையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் அளவை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  தமிழகத்திற்கு 500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீட வேண்டும் என முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், 419 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தற்போது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

  ஏற்கனவே, தமிழகத்தில் ஆக்சிஜன் கையிருப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து நேற்றைய தினம் பிரதமர் மோடிக்கு கடிதம் வாயிலாக விரிவாக முதல்வர் விளக்கம் அளித்திருந்தார். அதில், தமிழகத்தின் தினசரி ஆக்ஸிஜன் தேவை என்பது சுமார் 440 மெட்ரிக் டன் ஆக உள்ளது. இது வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அடுத்த 2 வாரங்களில் கூடுதலாக 400 மெட்ரிக் டன் தேவைப்படும் என தெரிகிறது. அதன்படி, தமிழகத்தின் மொத்த தேவையானது 840 மெட்ரிக் டன் ஆக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், செங்கல்பட்டு மருத்துவமனையில் 13 பேர் உயிரிழந்தது குறித்தும் மேற்கோள் காட்டி தமிழகத்தின் நெருக்கடி நிலையை அந்த கடிதத்தில் விவரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Esakki Raja
  First published: