10 திட்டங்களுக்கு தலா ₹ 1000 ஒதுக்கீடு... தமிழக ரயில்வே திட்டப்பணிகளை கைவிடுகிறதா மத்திய அரசு?

10 திட்டங்களுக்கு தலா ₹ 1000 ஒதுக்கீடு... தமிழக ரயில்வே திட்டப்பணிகளை கைவிடுகிறதா மத்திய அரசு?
இந்திய ரயில்வே
  • News18
  • Last Updated: February 14, 2020, 5:57 PM IST
  • Share this:
புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு ரூ.1000 மட்டுமே ஒதுக்கீடு செய்து தமிழக ரயில்வே திட்டப்பணிகளை கைவிடுகிறதா மத்திய அரசு.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இவ்வாறு தாக்கல் செய்யும் போது ரயில்வே திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு போன்ற விபரங்கள் அன்று வெளியிடப்படவில்லை.For more sample papers from CBSE Class 12 Science, please Click here:


தற்போது பிங்க் புத்தகத்தில் திட்டம் வாரியாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கி உள்ள நிதி விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சுமார் 5000 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க பொறியியல் மற்றும் போக்குவரத்து சர்வே செய்யப்பட்டுள்ளது.

இதில் இந்தாண்டு எந்தவொரு புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டமும் அறிவிக்கப்படவில்லை. முந்தைய ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கும் மிகக்குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் அனைத்து புதிய இருப்புபாதை பணிகளுக்கு இரண்டு கோடியே 70 லட்சத்து 10 ஆயிரம் ருபாய் மட்டுமே ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 2 கோடியே 70 லட்சங்கள் ரூபாய், ராமேஸ்வரம் - தனுஷ்கோடி - 17.2 கி.மீ புதிய பாதைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள திட்டங்களில் ஒரு திட்டத்துக்கு அடையாள நிதியாக ரூ.1000 வீதம் அனைத்துக்கும் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த செம்படம்பர் மாதம் ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு அனுப்பிய கடிதத்தில் புதிய இருப்புபாதை திட்டங்களில் 10 திட்ட பணிகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டதாக தகவல் வெளியாகியது.

தற்போது பட்ஜெட்டில் இந்த திட்டங்களுக்கு வெறும் 1000 ரூபாய் வீதமே ஒதுக்கப்பட்டது, இந்த திட்டங்கள் அனைத்தையும் ரயில்வேத்துறை ரத்து செய்துள்ளதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் புதிய இருப்புபாதை திட்டங்கள்:

1.மதுரை - தூத்துக்குடி வழி அருப்புகோட்டை -143.5 கி.மீ.

2.திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை- 70 கி.மீ

3.திண்டிவனம் - நகரி 179.2 கி.மீ

4.அத்திபட்டு - புத்தூர் -88.30 கி.மீ

5.ஈரோடு - பழநி 91.05 கி.மீ 6.சென்னை - கடலூர் வழி மகாபலிபுரம் 179.28 கி.மீ

7.ஸ்ரீபெரும்புதூர் - கூடவாஞ்சேரி - 60 கி.மீ

8.மொரப்பூர் - தர்மபுரி - 36 கி.மீ

9.ராமேஸ்வரம் - தனுஷ்கோடி - 17.2 கி.மீ

10.பெங்களுர் - சத்தியமங்கலம் - 260 கி.மீ

1.மதுரை - தூத்துக்குடி:

மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் காரியப்பட்டி, அருப்புகோட்டை, பந்தல்குடி, புதூர்நாகலாபுரம், விளாத்திக்குளம், குளத்தூர், மீளவிட்டான் வழியாக வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கி.மீ., தூரத்துக்கு புதிய பாதை அமைக்கப்படும் என 2011-12ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு தற்போது வெறும் 1000 ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்களில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இந்த திட்டத்துக்கு தேவையான நிலத்தையும் தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து ரயில்வேத்துறையிடம் ஒப்படைத்தது. இந்நிலையில், தற்போது குறைவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2.திண்டிவனம் - செஞ்சி-திருவண்ணாமலை:

திண்டிவனத்திலிருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை 2006-07-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் செஞ்சியில் கடந்த 2008-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தில் ஆறு ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அப்போதைய மொத்த திட்ட மதிப்பீடு 900 கோடி. நடப்பு பட்ஜெட்டில் வெறும் 1000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

3. திண்டிவனம் - நகரி:

திண்டிவனத்திலிருந்து ஆந்திரா மாநிலத்தில் உள்ள நகரிக்கு புதிய 179.2 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்கப்படும் என 2006-ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அப்போதைய திட்ட மதிப்பீடு 2300 கோடியாகும். இந்த திட்டத்துக்கு 2007-ம் ஆண்டு ராணிபேட்டையில் அடிக்கல் நாட்டப்பட்டு திட்டம் துவங்கப்பட்டது. இந்த பாதை விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளுர், சித்தூர் என 5 மாவட்டங்கள் எட்டு தாலுகாக்கள் வழியாக செல்லும். இந்த திட்டதில் சுமார் 20 ரயில் நிலையங்கள் அமைக்க திட்டம் உள்ளது. இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

4.அத்திபட்டு - புத்தூர்:

அத்திபட்டுவில் இருந்து ஊத்துக்கோடம் வழியாக புத்தூர்க்கு புதிய இருப்புபாதை 88.30 கி.மீ தூரத்துக்கு அமைக்க 2008-09ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் முக்கியாமாக சென்னை துறைமுகத்திலிருந்து ஆந்திரா கர்நாடகா மாநிலங்களுக்கு சரக்கு போக்குவரத்துக்கு என திட்டம் தீட்டப்பட்டு 50 சதவீகித நிதியை எண்ணூர் துறைமுக கழகமும், கப்பல் போக்குவரத்து துறையும் ரயில்வேத்துறையும் இணைந்து செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அப்போதைய திட்ட மதிப்பீடு 528 கோடி. பின்னர் எண்ணூர் துறைமுக கழகம் இந்த திட்டத்திலிருந்து பின்வாங்கியது. மேலும், இந்த திட்டத்துக்கு தேவையான நிலங்கள் கையகப்படுத்துவதில் பிரச்சனையும், நிலத்தின் மதிப்பும் அதிகமாக இருந்த காரணத்தால் இந்த திட்டத்தில் எண்ணூர் துறைமுக கழகம் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை ஒப்பந்தபுள்ளியும் கோரப்படவில்லை. இந்த திட்டத்தை ரத்து செய்ய ரயில்வே வாரியம் முடிவு எடுத்து இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ருபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

5.ஈரோடு - பழநி:

ஈரோட்டிலிருந்து சென்னிமலை, தாராபுரம் காங்கேயம் வழியாக பழநிக்கு 91.05 கி.மீ தூரத்துக்கு புதிய இருப்புபாதை அமைக்க 2008-09ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பீடு 1140 கோடி. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியில் 50 சதவீதம் நிதியையும், தேவையான நிலத்தை ஆர்ஜிதம் செய்து இலவசமாக ரயில்வேத்துறைக்கு தமிழக அரசு கொடுத்தால் மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துவிட்டது. தற்போது இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6.சென்னை - கடலூர் வழி மகாபலிபுரம்:

சென்னையிலிருந்து மகாபலிபுரம் புதுச்சேரி வழியாக கடலூர் வரை 179.28 கி.மீ தூரத்துக்கு புதிய பாதை அதைக்க 2008-09 –ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது இந்த திட்டத்துக்கு மொத்த திட்ட மதிப்பீடு 2350 கோடி. இந்த திட்ட வழித்தடத்தை மாற்றிசெயல்படுத்த புதுச்சேரி அரசு கோரிக்கை வைத்து, இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை புதுச்சேரி அரசு ரயில்வேக்கு தர தயாராக இருப்பதால் இந்த திட்டம் செயல்படுத்த இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7.ஸ்ரீபெரும்புதூர் - கூடவாஞ்சேரி:

சென்னையில் உள்ள ஸ்ரீபெரும்புதூரிலிருந்து ஆவடி இருங்கட்டுகோட்டை வழியாக கூடுவாஞ்சேரிரயில் 60 கிமீ தூரத்துக்கு புதிய பாதை அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆவடியிலிருந்து திருநின்றவூர், திருமழிசை, தண்டலம், இருங்காட்டுகோட்டை, ஸ்ரீபெரும்புதூர், போந்தூர், ஒரகடம், வழியாக கூடுவாஞ்சேரி வரை, ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டத்திற்கு, தமிழக அரசு நிலங்களை தன்னுடைய பங்காக எடுத்து இலவசமாக தர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், இதுவரை நிலம் கையகப்படுத்தி தரப்படவில்லை. இதனால் இத்திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8.மொரப்பூர் - தர்மபுரி:

மொரப்பூரிலிருந்து தர்மபுரிக்கு பழைய பாதையை மீண்டும் கொண்டு வரவேண்டி 36 கி.மீ அகலபாதை அமைக்க 2016-17-ம் ஆண்டு பட்ஜெட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது இந்த திட்டத்தின் மொத்த திட்ட மதிப்பீடு 360 கோடி. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசும் ரயில்வேத்துறையும் இணைந்து கூட்டு நிறுவனம் துவங்கி செயல்படுத்தினால் மட்டுமே ரயில்வேத்துறை மேற்கொண்டு முயற்சிகள் மேற்கொள்ளும் என்று ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9.ராமேஸ்வரம் - தனுஷ்கோடி:

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17.2 கி.மீ தூரத்துக்கு புதிதாக இருப்புபாதை அமைக்க 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கான மதிப்பு 208 கோடி.ந்இந்த பட்ஜெட்டில் 2 கோடியே 70 லட்சங்கள் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் புதிய இருப்புபாதை பணிகளில் இந்த ஒரு திட்டத்துக்கு மட்டுமே குறைந்தபட்ச வேலைகளுக்கு தேவையான நிதியை ரயில்வேத்துறை ஒதுக்கியுள்ளது.

10.பெங்களுர் - சத்தியமங்கலம்:

பெங்களுரிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலையடிவாரம் வழியாக தமிழகத்தில் உள்ள சத்தியமங்கலம் வரை புதிய இருப்புபாதை அமைக்க தென்மேற்கு மண்டலம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த திட்டம் வனவிலங்குகள் வசிக்கும் பகுதி வழியாக செல்வதால் சுற்றுகசூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டி உள்ளது. தமிழக அரசு சத்தியமங்கலம் வனபகுதியில் சர்வே பணிகளுக்கு அனுமதி மறுத்தது. பின்னர், பெங்களுர் முதல் சாம்ராஜ்நகர் வரை பாதை அமைக்க கர்நாடகா அனுமதி அளித்து 50 சதவீத  நிதியும் கொடுத்து தேவையான நிலத்தையும் இலவசமாக கொடுத்துள்ளது. இந்த திட்டத்துக்கு இந்த பட்ஜெட்டில் வெறும் 1000 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென்னக ரயில்வே பகுதிகளில் உள்ள ரயில்வே திட்டங்களை செயல்படுத்துவதற்காக 2020-21ம் ஆண்டில் மொத்தம் ரூ.4,057 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் கூட, மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள 10 புதிய பாதை திட்டங்களில் ஒன்றுக்கு கூட நிதி ஒதுக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, தமிழகத்தில் ரயில்வே வள்ர்ச்சியில் பின்னடைவையும் ஏற்படுத்தி உள்ளதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.

Also see...
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்