Weather Report | வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை.. மத்திய கிழக்கு வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிப்பு...

கோப்புப் படம்

வெப்பச்சலனம் காரணமாக, சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

  • Share this:
    சென்னையில் நேற்று காலை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. வடபழனி, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக பெய்த மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    புறநகர் பகுதியான அம்பத்தூரில் கருமேகம் சூழ்ந்து, சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. கருமேகங்களால் அம்பத்தூர் ஏரிக்கரை பகுதி ரம்மியமாக காட்சியளித்தது. இதேபோல் ஆவடி, அயப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்தது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒருவாரமாக மழை பெய்து வருவதால், விளைநிலங்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் பூண்டு, உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    புதுச்சேரியில் அரியாங்குப்பம், தவளக்குப்பம், காலாப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை பெய்ததால், வெப்பத்தின் தாக்கம் குறைந்தது.

    இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இது நாளை மறுதினம் புயலாக மாறி, ஒடிசா-மேற்குவங்க கரைப் பகுதிகளில் 26-ம் தேதி கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை குறித்து சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புயலை எதிர்கொள்ள மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். முன்னெச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும் படிக்க... Coronavirus | கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... நகரங்களை நோக்கி வரும் கிராம மக்கள்..

    கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறு, செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் அறிவுறுத்தி இருப்பதாகவும் அமைச்சர் ராமச்சந்திரன் குறிப்பிட்டார். இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: