வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை இணைசெயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இரு பிரிவாக பிரிந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை, வெள்ள சேதங்களை ஆய்வு செய்தது. பிற மாவட்டங்களில் இன்றும் ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக வந்துள்ள மத்திய உள்துறை இணைசெயலாளர் ராஜிவ் சர்மா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இரு பிரிவாக பிரிந்து சென்று திங்கட்கிழமை வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டது. அதன்படி, ராஜிவ் சர்மா தலைமையிலான 4 பேர் குழு, வடசென்னையில் உள்ள வீரசெட்டி தெரு மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை பகுதிகளில் வெள்ள சேதம் தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டது.
புரசைவாக்கத்தில் அழகப்பா சாலையில் தேங்கியிருக்கும் மழை நீரை அகற்றும் பணியை பார்வையிட்ட மத்திய குழுவினர், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஜவகர் நகர் சிவ இளங்கோ சாலையில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி மற்றும் வருவாய் பேரிடர் மேலாண்மை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர் மழை பாதிப்பு தொடர்பான புகைப்படங்களை கொண்டு, பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.
சென்னையில் வெள்ள சேதத்தை பார்வைட்ட மத்திய குழுவினர் புறநகர் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டம் முடிச்சூர் சாலை பகுதியை ஒட்டிய வரதராஜபுரத்தில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்தனர். அங்கு மாவட்ட சிறப்பு அதிகாரி அமுதா மற்றும் ஆட்சியர் ஆர்த்தி ஆகியோர் மத்திய குழுவினருக்கு வெள்ள சேத பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.
அதன்பிறகு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்துக்குச் சென்ற மத்திய குழு அதிகாரிகள் அங்கு மதிய உணவுக்குப் பிறகு ஆய்வு மேற்கொண்டனர். மழை வெள்ள பாதிப்பு குறித்து வைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டனர். மேலும், கல்பாக்கத்தை அடுத்த வடபட்டினத்தில் மழையால் சேதமடைந்த விளைநிலங்களை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகள் நீரில் மூழ்கி சேதமடைந்த நெல் பயிர்களை மத்திய குழுவினரிடம் காண்பித்து உரிய இழப்பீடு வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். மேலும், மழையால் சேதமடைந்த தோட்டக்கலை பயிர்கள் குறித்த புகைப்பட கண்காட்சியையும் மத்தியக் குழுவினர் பார்வையிட்டனர்.
அதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் மகாபலிபுரம் வழியாக புதுச்சேரிக்கு சென்றனர். தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அஸ்வினி குமார், ஆட்சியர் பூர்வா கார்க் உள்ளிட்டோருடன் மத்திய குழு மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டது. அதன்பிறகு மத்திய குழுவினரை அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் சந்தித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரிக்கு முதல் கட்டமாக 400 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
Must Read : தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் வீட்டிலேயே இருக்கலாம் - உயர் நீதிமன்றம்
இந்நிலையில், ராஜிவ் சர்மா உள்ளடங்கிய 4 பேர் கொண்ட குழு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து நேரில் இன்று ஆய்வு செய்கிறது. இதையடுத்து, பிற்பகலில் நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் சேத விவரம் குறித்த தகவல்களை சேகரிக்க உள்ளது. அத்துடன், ஆர்.பி.கவுல் உள்ளடஙகிய 3 பேர் கொண்ட குழு, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்யவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai Rain, Flood, Northeast monsoon