ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாய்வு- தொடங்கிவைத்த கனிமொழி

ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாய்வு- தொடங்கிவைத்த கனிமொழி

ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய தொல்லியல்துறை அகழ்வாய்வு- தொடங்கிவைத்த கனிமொழி

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையினர் 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகழாய்வு பணியை தொடங்கியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவிலேயே முதன்முதலாக 1876-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணி தொடங்கியது. ஜெர்மனி தொல்லியல் அறிஞர் ஜாகோர் தலைமையில் நடைபெற்ற இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி, இரும்பு பொருட்கள் உள்ளிட்டவை பெர்லின் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டன.

அதைத்தொடர்ந்து 1903-1904 ம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்தன. இவை அனைத்தும் சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அதன்பிறகு மத்திய தொல்லியல் துறை சார்பில் 2003ம் ஆண்டு தொடங்கி இரண்டு ஆண்டுகள் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. நீண்ட காலத்திற்கு பிறகு இந்த ஆய்வறிக்கை வெளியான நிலையில், ஆதிச்சநல்லூரில் 17 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக தொல்லியல் துறை சார்பிலும் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், 17 ஆண்டுகளுக்கு பின்னர் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கியுள்ளது. அகழாய்வு பணிகளை தூத்துக்குடி எம்.பி கனிமொழி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை ஆதிச்சநல்லூரியிலேயே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் அருங்காட்சியகம் அமைக்க உள்ளதாகவும், இதற்காக ஒதுக்கப்பட நிதி போதுமானதாக இருக்காது என்பதால், மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கும் என எதிர்பார்ப்பதாகவும் கனிமொழி தெரிவித்தார்.

கடந்த 2003 முதல் 2004-ம் ஆண்டு அகழாய்வு பணிகள் 600 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெற்ற நிலையில், தற்போது 116 சதுர மீட்டர் அளவில் நடைபெற உள்ளது. இந்த அகழாய்வுப் பணிகள் குறைந்தது 40 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

First published:

Tags: Excavation, Thoothukodi