தந்தை, மகன் உயிரிழப்பில் காவல்துறை பதிவுசெய்த எப்.ஐ.ஆர் போலியானதா? அம்பலப்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்

CCTV Footage

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறை பதிவுசெய்த முதல்தகவல் அறிக்கையில் உள்ள விவரங்களையும் மறுக்கும் வகையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

 • Share this:
  சாத்தான்குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்ததில் ஏற்பட்ட தகராறில் கைதுசெய்யப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தனர். காவல்துறையினர் தாக்கியதால் இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

  இருவரது உயிரிழப்புகளுக்கு காரணமானவர்களை கொலை வழக்கில் கைது செய்யவேண்டும் என்று ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய பிரபலங்கள் பலரும் குரல் எழுப்பியுள்ளனர். இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கைக்கு போலி என்பதை நிருபிக்கும் வகையில் சி.சி.டி.வி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

  முன்னதாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்கு ஒன்றை பதிவுசெய்திருந்தனர். இது தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில்,

  "APJ மொபைல்ஸ் கடை அரசு அனுமதியளித்துள்ள நேரத்திற்கு பிறகு, அரசு உத்தரவை மீறி திறந்திருந்தது. கடையின் முன்பு கடையின் உரிமையாளர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் அவரது நண்பர்களும் நின்று கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களைக் கூட்டம் போட வேண்டாம், அமைதியான முறையில் செல்லுங்கள் என்று சொன்னோம். அதற்கு மற்றவர்கள் கலைந்து சென்றுவிட்டார்கள். மேற்படி ஜெயராஜூம் அவரது மகன் பென்னிக்சும் தரையின் அமர்ந்து கொண்டு போக முடியாது என்று சொல்லி தரையில் உருண்டார்கள். அதில் அவர்களுக்கு ஊமைக்காயம் ஏற்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

  இந்த நிலையில், இந்த மொபைல் கடைக்கு அருகில் இருந்த கடையின் சிசிடிவி வீடியோ காட்சிகள் தற்போது ஊடகங்களுக்கு கிடைத்துள்ளன. கடையின் முன்பு பென்னிக்ஸின் நண்பர்களுடன் கூட்டமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சி.சி.டி.வி காட்சியில் அங்கே கூட்டம் ஏதும் இல்லை. பென்னிஸும், ஜெயராஜூம் தரையில் உருண்டு, புரண்டதாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருந்தநிலையில், அப்படி எந்த சம்பவமும் நடைபெறவில்லை. இந்த சி.சி.டி.வி காட்சி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
  Published by:Karthick S
  First published: