சென்னையில் முதற்கட்டமாக 2,100 அரசு பேருந்துகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அருகிலுள்ள கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயதான கல்லூரி மாணவி. இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் கணிதம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி மாணவி சொந்த ஊர் செல்வதற்காக விழுப்புரத்திலிருந்து கொத்தமங்கலம் செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். பேருந்து பெரும்பாக்கம் என்ற இடத்திற்கு சென்ற போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில் மாணவி மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார்.
இரவு 7. 15 மணி அளவில் பேருந்தில் மாணவி தனியாக இருப்பதை கவனித்த பேருந்து ஓட்டுநர் சிலம்பரசன் மாணவியின் அருகில் அமர்ந்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கோனூர் கிராமத்தில் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் தொடர்ந்து இயக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, பேருந்தில் இருந்து குதித்துள்ளார். தகவலறிந்து வந்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேருந்தை மடக்கிப்பிடித்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரை, காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேருந்து நடத்துனர் சிலம்பரசன் ஓட்டுநர் அன்புச்செல்வன் இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னையில் முதற்கட்டமாக 2,100 அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா அமைக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அளித்த பேட்டியில், நிர்பயா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பேருந்திலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல ஒவ்வொரு பேருந்திலும் 4 அவசர அபாய ஒலி எழுப்பும் பட்டன் அமைக்கப்படும். இதன் மூலம் பணிமனையில் உடனடியாக தகவல் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான பிரச்னைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க இலவச அழைப்பு எண்கள் அனைத்து பேருந்துகளிலும் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
பேருந்துகளில் வயதானவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், மாற்று திறனாளிகள், நரிக்குறவர்கள் என பல தரப்பினரும் பயணம் செய்வார்கள். ஆனால் சில நடத்துனர்கள் அவர்களை இறக்கிவிடுகின்றனர். எனவே, இது தொடர்பாக நடத்துனர், ஓட்டுநர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து இயக்குவது, ஆர்.டி.ஓ மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.
Also read: புழல் சிறை கைதி மர்ம மரணம் - கண்ணீர் வடிக்கும் மனைவி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Govt Bus