பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலக பெயரில் போலியாக அரசு ஆவணங்களை உருவாக்கியும், அரசு அலுவலகங்களில் இருந்து அனுப்புவது போல் ஈமெயில் அனுப்பி மோசடி செய்த பெங்களூரை சேர்ந்த மகாதேவய்யா, அங்கித் மற்றும் ஓம் ஆகிய மோசடி கும்பலை சி.பி.சி.ஐ.டி போலீசார்கைது செய்தனர். இவர்கள் 3 பேரையும் 6 நாள் காவல் எடுத்து சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினர். முன்னதாக நடத்தப்பட்ட விசாரணையில் பிரதமர் அலுவலகத்தில் வேலை பார்த்த இரண்டு ஓய்வு பெற்ற ஐ ஏ.எஸ் அதிகாரிகள் இரண்டு பேர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் பெங்களூர், மைசூர், ஓசூர் ஆகிய இடங்களில் கைதான 3 பேரையும் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மகாதேவய்யா மனைவி சுனந்தா பெயரில் சுமார் 6 கோடி மதிப்பில் செயற்க்கை அருவி அமைக்கப்பட்ட இரண்டு சொகுசு பங்களாங்களும், 3 சொகுசுக் கார்கள் மற்றும் மைசூரில் ஏக்கர் கணக்கில் தென்னந்தோப்பு ஆகிய சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைதான ஓம் பெயரிலும் அடுக்குமாடி குடியிருப்புகள், கோடிக்கணக்கான சொத்துக்கள் இருப்பதையும் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இந்த மோசடி கும்பல் சொத்துக்களை முடக்குவதற்காக அவர்கள் பெயரில் உள்ள சொத்துப்பட்டியலை கேட்டு கர்நாடக மாநில பதிவுத்துறை அலுவலகத்திற்கு சி.பி.சி.ஐ.டி போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
மேலும் விசாரணையில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு விவாகரத்தில் தமிழகத்தில் பிரபலமாக பேசப்பட்ட ராமர் பிள்ளைக்கு போலியாக மத்திய அரசு பரிந்துரை கடிதம் தயாரித்ததும் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை அங்கீகரிக்க வேண்டுமென பிரதமர் அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.டி.ஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு போலியாக பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டதையும் சி.பி.சி.ஐடி விசாரணையில் உறுதி செய்துள்ளனர்.
இந்த மோசடி கும்பலிடம் ராமர் பிள்ளை ஏமாந்துள்ளாரா? அல்லது மூலிகை பெட்ரோலை அங்கீகாரம் பெற மோசடி கும்பலிடம் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டாரா என கண்டுபிடிக்க ராமர்பிள்ளைக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கெனவே கேரள அரசு மூலிகை பெட்ரோல் தயாரிக்க அனுமதி அளித்துள்ளதாக கூறி தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும் மீண்டும் ராமர்பிள்ளை சர்ச்சையில் சிக்கியுள்ளார். கடந்த 6 நாள் காவலில் எடுத்து நடத்தப்பட்ட விசாரணயிலும், மோசடி கும்பலுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவிக்கின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்