காவிரி - குண்டாறு திட்டத்துக்கு இன்று அடிக்கல் நாட்டி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 342 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படுவதுடன், 42,170 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன.

 • Share this:
  6,941 கோடி ரூபாய் மதிப்பிலான, காவிரி- வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல்கட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

  காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் வரும் உபரி நீரை கரூர் மாவட்டம் மாயனூர், தடுப்பணையில் இருந்து, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைக்கும் திட்டத்திற்கு அண்மையில் தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

  இத்திட்டத்தின் முதல்கட்டமாக கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணையில் இருந்து பிரியும் கட்டளைக் கால்வாயில் இருந்து, புதுக்கோட்டை மாவட்டத்தின் தெற்கு வெள்ளாறு வரை 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற உள்ளன.

  இதன் மூலம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 342 ஏரிகளுக்கு நீர்வரத்து ஏற்படுவதுடன், 42,170 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. தொடர்ந்து 2ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிலோமீட்டர் தொலைவுக்கு வைகை ஆறு வரை கால்வாய் வெட்டப்பட உள்ளது. 3-ம் கட்டத்தில் வைகை ஆற்றில் இருந்து குண்டாறு வரை 34 கிலோமீட்டர் தொலைவுக்கு கால்வாய் வெட்டப்பட உள்ளது.

  இப்பெருந்திட்டத்தின் முதல்கட்டமாக 6,941 கோடி ரூபாய் மதிப்பில் காவிரி-தெற்கு வெள்ளாறு- வைகை- குண்டாறு நதிகள் இணைப்பு பணிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார். மேலும், 3384 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள் கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

  புதுக்கோட்டை மாவட்டம், குன்னத்தூர் ஊராட்சியில் நடைபெறும் இந்த விழாவுக்கு துணை முதலமைச்சர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டிவிட்டு உரையாற்றுகிறார். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி, கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
  Published by:Vijay R
  First published: