குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு
சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலருக்கும், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை உதவியாளருக்கும் 2002ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, 2017ல் பரஸ்பரம் ஒருமித்த கருத்துடன் இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன் பின் இரு குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துச் சென்ற கணவர், அவர்களை தனது சகோதரி பராமரிப்பில் விட்டுள்ளார்.
இந்நிலையில் குழந்தைகளை தன்வசம் ஒப்படைக்க கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், குழந்தைகளை ஒப்படைக்க கோரிய மனுவில் நியாயமான எந்த காரணத்தையும் நிரூபிக்கவில்லை எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சத்தியநாராயண பிரசாத் அமர்வு, இரு குழந்தைகளையும் நேரில் வரவழைத்து விசாரித்தது.
Also Read : பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை.. மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பதவியிறக்கம்
அப்போது, தந்தை தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும், தாயுடன் செல்ல விரும்புவதாகவும் இரு குழந்தைகளும் கூறினர். நீதிமன்ற அறையில் தாயை சந்திக்க அனுமதியளித்த நிலையில், இரு குழந்தைகளும் தாயும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர். இது நீதிமன்ற அறையில் இருந்தவர்களின் உள்ளத்தை கலங்கச் செய்தது.
இதையடுத்து, குழந்தைகளை தாயுடன் செல்ல அனுமதித்த நீதிபதிகள், அவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட உடைமைகளை உடனடியாக வழங்க வேண்டும் எனவும், அவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தக் கூடாது எனவும் தந்தைக்கு உத்தரவிட்டனர். மீறி ஏதேனும் இடையூறு விளைவித்தால் காவல் துறையில் புகார் அளிக்க தாய்க்கு நீதிபதிகள் அனுமதியளித்தனர்.
குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி மனைவி தாக்கல் செய்த வழக்கை ஆறு ஆண்டுகளுக்கு பின் தள்ளுபடி செய்த குடும்ப நல நீதிமன்றம், குழந்தைகளை அழைத்து விசாரித்து முடிவெடுக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளில் முடிவெடுக்க காலதாமதம் செய்தால் அது குழந்தைகளின் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அந்த மனுக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.