Home /News /tamil-nadu /

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் - 200 பேர் மீது வழக்குப்பதிவு

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் - 200 பேர் மீது வழக்குப்பதிவு

அதிமுக தொண்டர்கள் மோதல்

அதிமுக தொண்டர்கள் மோதல்

ADMK Office : அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 400 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இபிஎஸ் ஆதரவாளர்கள் 14 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

    அதிமுக அலுவலகத்தில் நேற்று ஓபிஎஸ்-இபிஎஸ் என இருதரப்புக்கும் இடையே மோதல் நடைபெற்ற நிலையில், தகவலறிந்து வந்த போலீஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுதொடர்பாக காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதலில், காவல் துறையைச் சேர்ந்த 2 பேர் மற்றும் தனிநபர் ஒருவர் உள்பட 47 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கலவரத்தை தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 14 பேர் கைதுசெய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தின் உரிமையை கோருவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை என்பதால், உரிய நடவடிக்கை எடுக்குமாறு தென்சென்னை வருவாய் கோட்ட அலுவலரிடம் ராயப்பேட்டை ஆய்வாளர் அறிக்கை அளித்தார்.

    இதனடிப்படையில், ஆவணங்களை ஆய்வுசெய்த கோட்டாட்சியர், கட்சி அலுவலகம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை முடிவுசெய்ய இருதரப்பினரும் தாமாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ வரும் 25-ம் தேதி ஆஜராக வேண்டும் என்று இருதரப்பினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும், பொது அமைதியை காக்கும் பொருட்டு, பிரச்சினைக்குரிய கட்டிடத்தை பூட்டி சீல்வைத்து போதுமான பாதுகாப்பு அளிக்க ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருதரப்பினரும் உரிய உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி தேவையான உத்தரவுகளை பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

    Must Read : அதிமுக அலுவலக தகராறுக்கும், திமுகவுக்கு எந்த தொடர்பும் கிடையாது: ஆர்.எஸ்.பாரதி

    அதிமுக தலைமை அலுவலக சொத்துக்கு பொறுப்பாளராக மயிலாப்பூர் வட்டாட்சியரை நியமித்து கோட்டாட்சியர் உத்தரவிட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், இருதரப்பையும் சேர்ந்த  200 பேர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Published by:Suresh V
    First published:

    Tags: AIADMK, Clash, EPS, OPS

    அடுத்த செய்தி