இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் உள்ளிட்ட 250 அதிமுகவினர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு!

இபிஎஸ்-ஓபிஎஸ்

ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஊரடங்கு தடையை மீறி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு!

  • Share this:
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவைச் சேர்ந்த 250 பேர் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியாக அதிமுக செயல்பட உள்ளது. அமைச்சருக்கு நிகரான எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவி வந்தது.

எதிர்க்கட்சி தலைவரை தேர்வு செய்வதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் யார் என முடிவு செய்யப்படாமலே திங்கட்கிழமைக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இன்று முதல் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுவது கேள்விக்குறியானது.

இந்நிலையில், அதிமுக தலைமை தரப்பில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்த அனுமதி கோரி தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மாநகர காவல் ஆணையர் ஷங்கர் ஜிவால் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து திட்டமிட்டபடி இன்று காலை 9.30 மணிக்கு அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைறெ்றது.

இக்கூட்டத்திற்கு பின்னர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழக எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே இன்று ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் ஊரடங்கு தடையை மீறி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தியது தொடர்பாக அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கம், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 250 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Published by:Arun
First published: