மணல் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக ஆவின் மேலாளர் உள்ளிட்ட 19 அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

Youtube Video

மணல் கடத்தல் கும்பலுடன் நேரடி தொடர்பில் இருந்ததாக ஆவின் பொதுமேலாளர் உள்ளிட்ட 19 பேர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
    தமிழகத்தில் மணல் கடத்தல் வழக்கில் முதல் முறையாக, மணல் கடத்தும் கும்பலோடு நேரடி தொடர்பில் இருந்ததாக 19 அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முதல் குற்றவாளியான ஈரோடு மாவட்ட ஆவின் பொதுமேலாளர் முருகேசன், மணல் கடத்தல் கும்பல் மூலம் 23 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கியது அம்பலமானது.

    கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம், சோளிங்கர் அருகே ஓரிடத்தில் மணல் கடத்தும் கும்பலைப் பிடிப்பதற்காக சார் ஆட்சியர் இளம்பகவத், அதிகாரிகளுடன் சென்றார். மணல் கடத்தும் கும்பலில் அனைவரும் தப்பிய நிலையில், ஒரே ஒரு டிப்பர் லாரியின் ஓட்டுநர் கிருஷ்ணன் மட்டும் சிக்கினார். மணல் கடத்தல் கும்பலின் முக்கிய புள்ளியான சரவணன் தப்பியோடும் போது அவரது 2 செல்போன்கள் சார் ஆட்சியர் இளம்பகவத்திடம் சிக்கின.

    அந்த செல்போனில் இருந்த அழைப்புகள் மற்றும் வாட்ஸ் ஆப் தகவல்களை ஆய்வு செய்தபோது சரவணனுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நேரடி தொடர்பிருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அனுப்பப்பட்ட அறிக்கையின் பேரில், வேலூர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ததில், அப்போதைய ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியராக இருந்து தற்போது ஈரோடு மாவட்ட ஆவின் பொது மேலாளராக உள்ள முருகேசனுக்கு, மணல் கடத்தல் கும்பல் சரவணன் பணம் அனுப்பியது தெரியவந்தது. மேலும், முருகேசன் தனது மனைவி அரசாணி பெயரில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்னோவா கார் வாங்கியதும் அதற்கான முழு தொகையையும் சரவணன் செலுத்தியதும் தெரியவந்தது.

    அதேபோல், அப்போது வாலாஜா பிர்கா வருவாய் அலுவலராக இருந்து தற்போது ராணிப்பேட்டை மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலராக உள்ள கன்னியப்பன், பாண்டியநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக், தற்போது அரக்கோணம் வட்ட வழங்கல் அலுவலராக உள்ள வெங்கடேசன், முன்னாள் வாலாஜா வட்ட மண்டல துணை வட்டாட்சியர் மதி, சோளிங்கர் காவல் ஆய்வாளராக இருந்த எம்.வெங்கடேசன், சோளிங்கர் உதவி ஆய்வாளராக இருந்த மகாராஜன், பாஸ்கரன், கொண்டபாளையம் காவல் நிலைய காவலர் விஜய பாஸ்கர், கொண்டபாளையம் தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் சங்கர், சோளிங்கர் தனிப்பிரிவு தலைமை காவலர் பச்சையப்பன், தலைமை காவலர் விஜயகுமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், பூபதி, தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயகுமார், காவலர்கள் ராஜ்கமல், சக்திவேல் ஆகியோருடன் சரவணன் நேரடி தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன.

    மேலும் படிக்க... ஜாதி மறுப்பு திருமணம்: காதல் ஜோடிக்கு ரவுடி கொலை மிரட்டல்

    இதையடுத்து, முறைகேடாக இயங்கிய மணல் குவாரிக்கு உடந்தையாக இருந்த வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் 19 பேர் மீது லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.



    இந்த வழக்கில், ஈரோடு ஆவின் பொதுமேலாளர் முருகேசன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். வழக்கு தீவிரமாக விசாரிக்கப்பட்டால் மேலும் பல அதிகாரிகள் சிக்குவார்கள். வழக்கு விசாரணை முழுமையாக நடக்குமா? அடுத்த கட்டத்திற்கு போகுமா? என்பது போகப் போகத் தான் தெரியும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: