ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கான மக்கள் கருத்துக் கேட்பு விலக்கிற்கு எதிராக வழக்கு

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கான மக்கள் கருத்துக் கேட்பு விலக்கிற்கு எதிராக வழக்கு

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (கோப்புப்படம்)

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (கோப்புப்படம்)

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறு அமைப்பதற்கான மக்கள் கருத்துக் கேட்பு விலக்கிற்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனிமேல் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அவசியமில்லை என்ற மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவை எதிர்த்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் தாக்க அறிவிக்கை 2006ல் மத்திய சுற்றுச்சூழல் துறை திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தது.

நிலம் மற்றும் கடற்பகுதியில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கு இனிமேல் மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஏற்கெனவே இருந்த விதிகளின்படி எண்ணெய் மற்றும் எரிவாயு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்வது பின்னர் உற்பத்தியைத் தொடங்குவது போன்ற பணிகள் A வகை திட்டங்களாகும். இத்திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் அவசியமானதாக இருந்தது. மேலும் இத்திட்டங்களுக்கான அனுமதியை மத்திய அரசுதான் வழங்க முடியும் என்றிருந்தது.

ஆனால், ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட  திருத்தத்தின் மூலம் ஹைட்ரோகார்பன்  உள்ளதா என்பதை அறிந்துகொள்ள அமைக்கப்படும் ஆய்வுக் கிணறுகளுக்கு மத்திய அரசிடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டாம், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு, சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம், பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்  அவசியமில்லை என்று திருத்தம் கொண்டு வரப்பட்டது.

Also read: ’வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது’ - குஷ்பு கருத்து

இந்த உத்தரவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த கே.ஆர். செல்வராஜ்குமார் என்பவர் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கில், ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்கும்போது ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கணக்கில் கொள்ளாமலும், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட பிரிவு 3-க்கு எதிராகவும் இத்திருத்தம் இருப்பதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனுவானது தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன், நிபுணத்துவ உறுப்பினர் தாய்பால் தாஸ் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்த தீர்ப்பாயம் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் துறை இந்த மனு மீது பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதேபோல, கடல் பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஹைட்ரோகார்பன் இயக்குநரகமானது மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் கோரியிருந்த விஷயம் RTI மூலம் தெரியவந்துள்ளது.

கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க கடற்கரை ஒழுங்காற்று மண்டல அனுமதி பெறுவதிலிருந்து விலக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்திருப்பதாகவும், தற்சமயம் இக்கோரிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் தனது பதிலில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Rizwan
First published:

Tags: Hydrocarbon Project, National Green Tribunal