அமைச்சர் கார் அருகே பட்டாசு வெடித்த விவகாரம்: அமமுக நிர்வாகிகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு

அமைச்சர் கடம்பூர் ராஜு (கோப்புப் படம்)

அமமுகவினர் தோல்வி பயத்தால் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கடம்பூர் ராஜு கூறியிருந்தார்...

  • Share this:
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது அவரின் கார் அருகே, பட்டாசு வெடித்து இடையூறு ஏற்படுத்தியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில்பட்டி, பசுவந்தனை சாலையில் கடம்பூர் ராஜு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவருக்கு இடையூறு செய்தது, அன்னை தெரசா நகர் வழியாக சென்றபோது அவர் கார் அருகே பட்டாசு வெடித்து போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகளான கார்த்திக் மற்றும் கருப்பசாமி ஆகியோர் மீது மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் போட்டியிடுகிறார். இதனால் அங்கு இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகின்றது.

கார் அருகே பட்டாசு வெடித்த விவகாம் குறித்து பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுகவினர் தோல்வி பயத்தால் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக கூறினார். மேலும் இது குறித்து பேசிய அவர், “அமமுகவினர் எனது காரை வழிமறித்தனர். அதையெல்லாம் கடந்து நான் வந்தேன். அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த வெடியை அமமுகவினர் என் கார் மீது வீசி எறிந்தனர். வாகனம் தீப்பற்றி எரியக்கூடிய சூழ்நிலை இருந்தது. என்னுடைய கார் டிரைவர்,எனக்கு தீப்பொறி மேலே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளன.

அமமுகவின் அராஜக செயல் மக்களுக்கு தெரியும். மக்கள் முடிவெடுப்பார்கள். என்னுடைய கார் டிரைவர் லாகவமாக காரை ஓட்டவில்லை என்றால் கார் தீப்பிடித்து எரிந்து என்னுடைய உயிருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதைக்கண்டு நான் அஞ்சப்போவதில்லை. தேர்தல் பணிக்கு வரும் போதே இப்படி அராஜகம் செய்யும்போது, நாளை தொகுதிக்கு பணிக்கு வரும் போது எப்படி நிலை இருக்கும் என்பதை மக்கள் கண்கூடாக பார்க்கிறார்கள். என்னுடைய தேர்தல் பணியை தடுப்பதற்காக கொலை செய்ய முயற்சி செய்கின்றனர். தோல்வியின் பயத்தினால் இப்படிப்பட்ட செயல்களில் அமமுகவினர் இறங்கியுள்ளனர். எதையும் சந்திக்க நான் தயாராக உள்ளேன்.” என்று கூறியிருந்தார்.

Must Read :  ‘திமுக போகாத ஒரே கடை சாக்கடை தான்’ - நடிகை விந்தியா

 

இந்நிலையில், விஐபிகளிடம் வழங்க அமைச்சர் கடம்பூர் மூன்று பைகளில் கொண்டு சென்றது என்ன என்பது தொடர்பாக, கம்பூர் ராஜுவிற்கு எதிரான வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதை தேர்தல் ஆணையத்திடம் தர இருப்பதாகவும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Suresh V
First published: